கடந்த ஆண்டு துபாய் ஹோட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மலையாள நடிகர் நிவின் பாலிக்கு போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணைக் குழுவால் அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Actor Nivin Pauly gets clean chit in sexual assault case owing to lack of evidence
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது புகாரில், நிவின் பாலி மற்றும் தயாரிப்பாளர் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு படத்தில் நடிப்பதாக உறுதியளித்த பின்னர், நிவின் பாலி தன்னை தாக்கியதாக அவர் கூறினார். அவரது புகாரின் அடிப்படையில், நிவின் பாலி 6வது குற்றவாளியாக பெயர் சேர்க்கப்படு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியில் நிவின் அந்த இடத்தில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய துணைக் காவல் கண்காணிப்பாளர் (DySP) எர்ணாகுளம் கொத்தமங்கலம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சந்தேகநபர் பட்டியலில் இருந்து நிவின் பாலி பெயர் நீக்கப்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாத்ருபூமி வெளியிட்டுள்ள செய்திப்படி, ஆகஸ்ட் 6, 2024 தேதியிட்ட புகாரில், நிவின் பாலி மற்றும் அவரது பி.ஆர். குழு தன்னையும் அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்துவதாக பொய்யான தகவல்களைப் பரப்பி, தன்னை ஒரு ஹனி ட்ராப் என்று குற்றம் சாட்டி தன்னை இழிவுபடுத்த முயற்சிப்பதாக அந்தப் பெண் கூறினார்.
செப்டம்பரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு, நிவின் பாலி இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தார், அவற்றை "முற்றிலும் பொய்" என்று கூறினார். “நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியை நான் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தெரிவிக்கவும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும், இதற்கு காரணமானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்பூர்வமாக கையாளப்படும்” என்று அவர் உடனடியாக சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு பதிவில் கூறினார்.
மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான பாகுபாடு மற்றும் சுரண்டலை அம்பலப்படுத்திய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள மாநிலம் முழுவதும் அதிர்ந்துபோயிருந்த நேரத்தில் இந்தப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு அனுபவங்களைப் பேசினர், பணியிடத்தில் தவறாக நடத்தப்பட்டதை விவரித்தனர். முக்கிய ஆண் நபர்கள் மீது பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில் அம்மா முன்னாள் பொதுச்செயலாளர் சித்திக், திரைப்பட தயாரிப்பாளர் ரஞ்சித், நடிகர் சட்டமன்ற உறுப்பினர் முகேஷ், நடிகர்-இயக்குனர் பாலச்சந்திர மேனன், நடிகர்கள் எடவேல பாபு, மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா, பாபுராஜ், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் அடங்குவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“