/indian-express-tamil/media/media_files/2025/07/29/actor-prabhu-2025-07-29-16-05-17.jpg)
தமிழ் திரையுலகில் இரு பெரும் ஜாம்பவான்களாக விளங்கியவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். நாடகத் துறையின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இருவருக்கும், மக்களின் ஆதரவு அமோகமாக கிடைத்தது. குறிப்பாக, இருவருக்கும் சம அளவில் ரசிகர்கள் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாது உண்மை.
இவர்கள் இருவருமே நடிப்பில் வெவ்வேறு பாணியை கடைபிடித்தனர். இதில், விதவிதமான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிவாஜி கணேசன் நடித்தார். அதற்கு மாறாக, ஆக்ஷன் படங்களில் அதிகமாக நடிப்பதில் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தினார். ஒரு வகையில் பார்த்தால், இதுவே இவர்கள் இருவரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
தொழிலில் இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நட்பு மற்றும் புரிதலுடன் இவர்கள் நடந்து கொண்டார்கள் என திரைத்துறையைச் சேர்ந்த பலர் கூறி நாம் கேட்டிருக்கிறோம். இதற்கு ஒரு உதாரணமாக சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான பிரபு, ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, எம்.ஜி.ஆரின் ஆக்ஷன் திரைப்படங்களை தாம் விரும்பி பார்ப்பதாகவும், இதனை தனது தந்தை சிவாஜி கணேசனே பலரிடம் கூறியதாகவும் பிரபு தெரிவித்துள்ளார்.
அதன்படி, "ஆக்ஷன் திரைப்படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை நான் ரசித்து பார்ப்பேன். இதனை என் தந்தை சிவாஜி கணேசனும் பலமுறை கூறி இருக்கிறார். குறிப்பாக, 'என் பையன், என்னுடைய அண்ணன் (எம்.ஜி.ஆர்) படத்தை அதிகமாக பார்ப்பான்' என்று என் தந்தை கூறுவார்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான அழைப்பிதழ் என் தந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், என் தந்தையால் அதற்கு செல்ல முடியவில்லை. எனினும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்பதால், என்னை அனுப்பி வைத்தார். அதன்படி, தேவி பாரடைஸ் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக நான் சென்றேன்.
அப்போது, திரையரங்கிற்கு வந்த எம்.ஜி.ஆர் என்னை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். என்னை ஆரத்தழுவி முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது" என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.