இங்கிலாந்தில் கல்வி கற்க நிதியுதவி அளித்ததன் மூலம் தகுதியுள்ள ஒரு ஏழை மாணவியின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜின் செயலுக்கு, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் இயக்குனர் நவீன், தனது ட்வீட்டரில் ஒரு ஏழை மாணவிக்கு பிரகாஷ் ராஜ் எப்படி உதவினார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
thnx & salutes to this man @prakashraaj . he has financially helped Srichandana, a fatherless poor meritorious dalit girl, secure her admission in UK university, finish her masters and now funded for her to find a job there too. thnx sir for making a difference in one’s life ❤️ pic.twitter.com/tfB41u4Qxy
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) December 13, 2021
அதில்’ “பிரகாஷ் ராஜுக்கு நன்றி & வணக்கங்கள். தந்தையில்லாத ஏழை தகுதியுடைய தலித் பெண்ணான ஸ்ரீ சந்தனாவிற்கு, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறவும், முதுகலைப் படிப்பை முடிக்கவும் அவர் நிதி உதவி செய்துள்ளார். இப்போது அவளுக்கு அங்கு வேலை கிடைக்க நிதியுதவி செய்துள்ளார். ஒருவரின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி சார்.”என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த மேலும் விவரங்களையும் நவீன் கூறினார்; “18 மார்ச் 2020 அன்று, நான் ரவுண்ட் டேபிள் இந்தியாவிலிருந்து ஒரு கட்டுரையை பிரகாஷ் ராஜ் சாருக்கு அனுப்பி, ஒரு சிறிய பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அது உண்மையா என்று என்னிடம் கேட்டார். பெண்ணின் மாமாவின் எண்ணைக் கொடுத்தேன். பிறகு பிரகாஷ் ராஜ், ஸ்ரீசந்தனாவிடம் பேசி அவளது முழுக் கல்வியையும் முடிக்க நிதி உதவி அளித்தார்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளை கூட, பல நூற்றாண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டதனாலேயே இருக்கும் ஏழ்மையின் காரணமாக, எட்டமுடியாத அவர்களுக்கு பிரகாஷ் ராஜ் போன்ற மனிதர்கள் ஒரு கலங்கரை ஒளி. நன்றி சார் என்று நவீன் பதிவிட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரனும் பிரகாஷ் ராஜ் செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்த மனிதர் மட்டும்தான், அமைதியாக நிறைய விஷயங்களைச் செய்கிறார்.. என் அன்பு நண்பர் பிரகாஷ் ராஜூக்கு’ வணக்கம் மற்றும் பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் இயக்குநர் என பன்முக கலைஞராக விளங்குபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
நலிவடைந்தவர்களுக்கு பிரகாஷ் ராஜ் உதவுவது இது முதல்முறை அல்ல. சமீபத்தில் மைசூர் அருகே ஸ்ரீரங்கபட்ணா என்ற ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு ஜேசிபியை பரிசளித்தார். மேலும் தனது பிரகாஷ் ராஜ் ஃபவுண்டேஷன் சார்பாக பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
பிரகாஷ் ராஜ் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழன் வேடத்தில் நடித்து வருகிறார். தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”