நடிகர் ராஜ்கிரண் தனது ரசிகரின் கல்யாணத்துக்கு மதுரைக்கு போன இடத்தில், சும்மா பேச்சுத் அனுப்பப்பட்ட வடிவேலு, தன்னுடைய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமானது குறித்து ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதில் நடிகர் ராஜ்கிரண் கூறியிருப்பதாவது: “நான் தயாரிப்பாளராக இருக்கும்போது விளம்பர உத்திகள் செய்வேன். தயாரிப்பாளராக இருந்த எனக்கே ரசிகர் மன்றம் இருந்தது. அதில் ஒரு பையனுக்கு கல்யாணம். அவன் நீங்கள் தாலி எடுத்து கொடுத்தாதான் கல்யாணம் பண்ணுவேன்னு வெறித்தனமாக இருந்த ஆளு. அவன் கல்யாணத்துக்காக ரயிலில் மதுரைக்கு போனேன். இரவு ரயிலில் புறப்பட்டு காலையில் மதுரைக்கு போய் சேர்ந்துவிட்டேன். காலையில் கல்யாணம் முடிந்துவிட்டது. அடுத்து, திரும்ப வருவதற்கு இரவுதான் ரயில். அதனால், ஒரு நாள் முழுவதும் நான் சும்மாதான் இருக்க வேண்டும். அப்போது, அந்த பையன் சார் என் ஃபிரண்ட் ஒருத்தன் இருக்கான், உங்களுக்கு பொழுதுபோவதற்காக உங்களுடன் சும்மா பேசிக்கொண்டிருப்பான். அவனை உங்களுக்கு துணைக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்கள் தனியாக இருந்தால் போரடித்துவிடும் என்று அனுப்பி வைத்தேன். அப்படி வந்த பையன்தான் வடிவேலு. அவன், சார் நாங்க இப்படி லந்து பண்ணுவோம், அப்படி கலாய்ப்போம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். நான் கேட்டு ரசித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன். அப்போது அவனும் என்கிட்ட சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கவில்லை. எனக்கும் அந்த சிந்தனை இல்லை. சும்மா பேச்சு துணைக்கு அனுப்பப்பட்டான்.
இதற்கு அப்புறம் ஒரு 2-3 வருஷம் கழிச்சு, என் ராசாவின் மனசிலே படம் பண்ணப் போறேன், அதில் ஒரு 2 சீன் வர்ற மாதிரி ஒரு சின்ன கேரக்டர் இருக்கு. இதற்கு புதுசா ஒருத்தரைப் போடலாமேனு யோசித்துக் கொண்டிருக்கும்போது, அப்போது, ஞாபகம் வந்தது, 2-3 வருஷத்துக்கு முன்னாடி மதுரையில் ஒரு பையனைப் பார்த்தோமே என்று ஞாபகம் வந்தது. இப்போது அவனை எப்படி கண்டுபிடிக்கிறது என்றால், அவனை அறிமுகப்படுத்திய மாப்பிள்ளை பையன் பேரு இளங்கோ, எனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம், இன்லேண்ட் லெட்டரில் பின்னாடி அவன் பெயர், பொன் நம்பர் சீல் குத்தியிருப்பான்.
எனக்கு இந்த சிந்தனை வரும்போது, நான் திண்டுக்கல்லில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். சென்னையில் நம்ம ஆஃபிசுக்கு போன் போட்டு, ரசிகர்கள் கடிதம் எல்லாம் பண்டல் பண்டலாகக் கட்டி பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது. அதில், பெயர், போன் நம்பர் சீல் போட்டு இருக்கிற கடிதத்தில் உள்ள போன் நம்பருக்கு போன் போட்டு, கல்யாணத்துல பொழுதுபோக்காக பேச்சுத் துணைக்கு அனுப்பினயாமே, அவன் திண்டுக்கல்லில் காலையில் 7 மணிக்கு இருக்க வேண்டும் என்று இரவு 9 மணிக்கு சொன்னேன். அவர்கள் 12 மணிக்கு லெட்டரை தேடி எடுத்து போன் போட்டு சொல்லி அவன் வர்றான்.
அவன் வந்த உடனே காலையில் ஷூட்டிங் போனோம், நான் நினைச்ச அந்த 2 சீன், ஃபர்ஸ்ட் கிளி ஜோசியம் கேட்கிறது. அதற்கு அப்புறம், கவுண்டமணி சார் கிட்ட நல்லா இருக்கியா என்று கேட்டு அடிவாங்குகிற சீன்.
இப்போது, கவுண்டமணி சார்கிட்ட அடிவாங்குகிற சீனில், “ஏன்னே, நல்லா இருக்கீங்களானு கேட்கிறது ஒரு குத்தமாண்ணே, அண்ணே அண்ணே அடிக்காதீங்கண்ணே, இது ஒரு குத்தமாண்ணே” என்பதுதான் நான் சொல்லிக் கொடுத்த டயலாக்.
ஆனால், அவன் என்ன பண்ணான், கவுண்டமணி கீழ போட்டு மிதிப்பார் இல்ல, அப்போது அவன், “அண்ண அண்ண படாத இடத்துல பட்டுடப் போகுதுண்ணே” என்று சொல்லிவிட்டான். அது அவனா, சொன்ன டயலாக், எனக்கு அது இன்ஸ்பயர் ஆகிடுச்சு. அது நல்லா இருக்கு, கிரியேட்டிவா இருக்கானே என்று நினைத்தேன். சீன் முடிந்த பிறகு, “நான் புறப்படுறேன்ணே, ரொம்ப நன்றிண்னேனு” சொல்ல வந்தான்.
அதற்கு நான் இர்டா போலாம்டா, இரு அப்படினு இருக்க வச்சுட்டு, அப்புறம் அவனுக்காக உருவாக்கினேன், “போடா போடா புண்ணாக்கு” சாங் சீன்” என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.
இதன் மூலம், ராஜ்கிரணுக்கு பேச்சுத் துணைக்காக அனுப்பப்பட்ட வடிவேலு, தமிழ் சினிமாவின் டாப் நகைச்சுவை நடிகராக வைகைப் புயலாக கொடிகட்டிப் பறந்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“