தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு இன்று காலை தீடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ராஜேஷ் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 1974-ல் கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். தொடர்ந்து, "கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை" உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதேபோல், 90'ஸ் கிட்ஸ்களின் விருப்ப படங்களான நேருக்கு நேர், தீனா, சிட்டிசன், ரமணா, ரெட், சாமி, கோவில், ஆட்டோகிராஃப், ஜி, சிவகாசி, திருப்பதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும், அவர் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே இறந்துவிட்டார். திவ்யா, தீபக் என்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜேஷ் உயிர்ழந்துள்ளார். அவரது மறைவு சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.