ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 170-வது படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள நிலையில், அமிதாப் பச்சன் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இற்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் அமிதாப்புடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியில் பல படங்களில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள ரஜினிகாந்த் கடைசியாக, கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ஹம் என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் 1995-ம் ஆண்டு பாட்ஷா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“