தமிழ் சினிமா உலகில் இன்றைக்கும் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கே கடும் போட்டி கொடுத்தவர் நடிகர் ராமராஜன். அதிலும் இளையராஜா இசைக் கூட்டணியில் அமைந்த படங்கள் எல்லாமே ஹிட்தான். இளையராஜா - ராமராஜன் - கங்கையமரன் கூட்டணியில் உருவான கரகாட்டக்காரன் படம் திரையரங்கில் ஒரு ஆண்டு ஓடி சாதனை படைத்தது. ராமராஜனுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ராமராஜன் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராமராஜன் - நளினி தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக நளினியும், ராமராஜனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தமிழ் சினிமாவின் போக்கு மாறியதால், ராமராஜனும் மார்க்கெட் இழந்தார், அரசியலுக்கு சென்ற ராமராஜன் எம்.பி-யாகவும் இருந்தார். சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி இருந்த பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ராமராஜன் கதாநாயகனாக நடித்துள்ள சாமானியன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ராமராஜனின் மகள் அருணா தனது தந்தை நடித்திருக்கும் சாமானியன் படம் குறித்து அளித்திருக்கும் நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் ராமராஜனின் மகள் அருணா, “அப்பா நடித்த சாமானியன் படத்தை பார்த்தேன். ரொம்ப எமோஷனலாகவும், பெருமையாகவும் இருக்கிறது. சமூக கருத்துள்ள படத்தை கொடுத்திருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து நடித்தாலும் ஒரு தரமான படத்தில் நடித்திருக்கிறார். தான் யார் என்பதையும் நிரூபித்துவிட்டார்.” என்று பெருமிதமாகக் கூறியுள்ளார்.
அந்த நேர்காணில் ராமராஜன் மகள் அருணா மேலும் கூறியிருப்பதாவது: “தியேட்டருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள். அப்பாவை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அதே பாசத்தோடுதான் மக்கள் இருக்கிறார்கள். நான் படத்தை பார்த்துவிட்டு போஸ்டருக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அப்பாவுக்கு அனுப்பி, 'நீங்க ஜெயிச்சிட்டீங்க அப்பா. ஆல் தி பெஸ்ட்' என்று சொன்னேன். அப்போது அவரது குரலில் சந்தோஷம் தெரிந்தது. இனிமேல் அவருக்கு வெற்றி பயணம்தான். என்னுடைய தம்பி அருண் வெளிநாட்டில் இருக்கிறான். அங்கு படம் ரிலீஸாகவில்லை. அதனால், அவன் படம் பார்க்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அம்மா நளினி ராமராஜனின் சாமானியன் படத்தை பார்த்தாரா என்பது குறித்து ராமராஜனின் மகள் அருணா பேசியுள்ளார். அதில், “அம்மா படம் பார்க்கவில்லை. அவர் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். படம் ஹிட் ஆனதில் அவருக்கு மகிழ்ச்சிதான். படத்தின்போது எடுத்த வீடியோக்களை எல்லாம் பார்த்துவிட்டு அம்மா உற்சாகமாகிவிட்டார். அவர் (ராமராஜன்) நிறைய படங்கள் செய்து பழைய மாதிரி வர வேண்டும் என்று அம்மா கூறினார். முக்கியமாக, அப்பாவுக்கு இந்த ஜானரில் நடிப்பது புதிது. இப்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாறிவிட்டார். இந்த மாதிரி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அப்பா நடிக்க வேண்டும். அவர் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. இப்போது எதை ஓபன் செய்தாலும் அவருடைய முகம்தான் தெரிகிறது. எல்லா டிவியிலும் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று அருணா தனது தந்தை ராமராஜன் குறித்து பெருமிதமாக கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“