நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன், காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் தொடர்ச்சியாக, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தில், ரவி மோகன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக அறிவித்த ரவி மோகன், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளானது. ஆனால், விவாகரத்து கொடுக்க தனக்கு விருப்பம் இல்லை எனவும், சேர்ந்து வாழவே தான் விரும்புவதாகவும் ஆர்த்தி தனது தரப்பில் இருந்து தெரிவித்த்தார்.
இதன் காரணமாக, ரவி மோகன் மற்றும ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் மத்தியஸ்தர் முன்னிலையில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்றைய தினம் (ஜன 18) இவர்களது விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருவரும் சமரச தீர்வு மையத்தில் மத்தியஸ்தர் முன்னிலையில் ஆஜராகி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பேரில், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பாக, சமரச பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே, விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.