/indian-express-tamil/media/media_files/2025/09/19/robo-2025-09-19-10-12-50.jpg)
கேப்டன் படத்தில் அறிமுகம், லோகேஷ் கனகராஜ்க்கு சவால்; குட்டி அரவிந்த் ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசைகள்!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கமெடி நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். தனியார் தொலைக்காட்சியில் வெளியான காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ போன்று வேடமிட்டு நடனமாடியதால் அவரை ரசிகர்கள் ரோபோ சங்கர் என அழைத்தனர்.
கமல், ரஜினி என பல பிரபலங்களின் குரல்களில் மிமிக்ரி செய்வதில் ரோபோ சங்கர் வல்லவர். மதுரையைச் சேர்ந்த நடிகர் ரோபோ சங்கர் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான 'தர்ம சக்கரம்’ படம் மூலம் சினிமா உலகில் கால் பதித்தார். இதையடுத்து, பல ஆண்டுகள் கழித்து ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘தீபாவளி’ திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்து கவனம் பெற்றார்.
விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், சூர்யாவுடன் சிங்கம்-3, தனுஷுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் ரோபோ சங்கர்.
விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் ரோபோ சங்கர் சிறு வயது முதலே நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்தார். கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று போஸ்டர் அடித்து கொண்டாடும் அளவிற்கு அவர் மீது பெரும் அன்பு வைத்திருந்தார். கமல்ஹாசனின் படங்களை முதல் நாளே திரையரங்கில் பார்த்துவிடுவார் என்பது அவர் வாழ்நாளில் தவறவிடாத பழக்கம்.
நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில், “என்னைவிட பெரிய கமல் ரசிகன் எவரும் இல்லை, கமலைப் பற்றிய தகவல் என்னை விட வேறு யாருக்கும் தெரியாது” என்று பெருமிதத்தோடு கூறினார். அதுமட்டுமல்லாமல்,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் மணிகண்டனை விவாதத்திற்கு அழைத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்கு இறுதி வரை அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே மறைந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக நடிகர் ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது நடிகர் கமல்ஹாசன் அடிக்கடி நலம் விசாரிப்பதாக ரோபோ பல பேட்டிகளில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது மகள் இந்திரஜாவிற்கு குழந்தை பிறந்தும் தனது பேரனுடம் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவரது மறைவு தமிழ் சினிமா உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் ரோபோ சங்கருக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் மூலம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி, போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.” என்று குறிப்பிட்டுள்ளார். ரோபோ சங்கர் உடலுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரோபோ சங்கர்
— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.