பாலியல் புகார் குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை என விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா நடிகர்கள் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் கேரள சினிமா துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமா துறைகளிலும் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் புகார்களைக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 08) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், “பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும் என்று தெரிவித்தார். பாலியல் புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்ல மாட்டோம் என்றும் புகார் மீது நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய விசாகா கமிட்டி தலைவரும் நடிகையுமான ரோகிணி கூறியதாவது, பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என்றார். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று அவர் தெரிவித்தார். பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள் என்றும் அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை என்றும் நடிகை ரோகிணி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“