மகள் பல் டாக்டர், மகனுக்கு பிரான்சில் படிப்பு... 35 வருட உதவியாளருக்கு சரத்குமார் செய்த உதவி; யார் அந்த முத்து?
நடிகர் சரத்குமார், தன்னிடம் உதவியாளராக பணியாற்றும் முத்து என்ற நபருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இது குறித்த விவரங்களை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சரத்குமார், தன்னிடம் உதவியாளராக பணியாற்றும் முத்து என்ற நபருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இது குறித்த விவரங்களை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்து கொண்டார்.
சினிமா துறையை பொறுத்த வரை, நட்சத்திர நடிகர்கள், இயக்குநர் போன்றோர் வெளியே தெரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு உதவியாளர்களாக சாமானியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
Advertisment
இவர்களில் சில உதவியாளர்கள் பல ஆண்டுகளாக ஒரே நடிகர்களிடம் பணியாற்றி வருவதும் உண்டு. இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக இருக்கக் கூடும். ஒன்று, சம்பந்தப்பட்ட உதவியாளரின் நேர்மை; மற்றொன்று, அவர் பணியாற்றும் அந்த உச்ச நடிகர் தனது உதவியாளரை கண்ணியமாக நடத்தும் விதம்.
அந்த வகையில், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது உதவியாளர் முத்து என்பவர் குறித்து பலரும் தெரியாத சில சுவாரசிய தகவல்களை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் '3BHK' திரைப்படத்தின் புரோமோஷனுக்காக பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தொகுத்து வழங்கினார். இதில், நடிகர் சரத்குமாரின் உதவியாளர் முத்துவை, கே.எஸ். ரவிக்குமார் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
Advertisment
Advertisements
அதன்படி, நடிகர் சரத்குமாரிடம் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக முத்து என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த முத்து என்ற நபரின் மகள் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும், இவருடைய மகன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு ஃபேஷன் டிசைன் பயின்று வருகிறார்.
இது அனைத்திற்கும் சரத்குமார் தான் காரணம் என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தன்னிடம் உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவருடைய குழந்தைகளின் கல்விக்கு சரத்குமார் இந்த அளவிற்கு உதவி செய்தது, பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.