அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஷாருக்கான் நயன்தாராவுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் இயக்கியுள்ள ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார். நயன்தரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் மூலம் அனிருத் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆகிறார்.
இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ந் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்காக கடந்த சில தினங்களாக ஜவான் படத்திற்காக ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்பதிவில் நேற்று வரை சுமார் 17 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஜவான் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக நடிகர் ஷாருக்கான் படத்தின் நாயகி நயன்தாராவுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவதேவி கோவிலில் ஷாருக்கான் சாமி தரிசனம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஷாருக்கான் தனது மகளுடன் திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார்.
அதேபோல் படத்தின் நாயகி நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இந்த தரிசனத்தின்போது நடிகர் ஷாருக்கான் வேட்டி சட்டை அணிந்திருந்தார். தரிசனம் முடிந்து அனைவரும் வெளியில் வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்ததால் உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“