அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது தன்னுடன் இந்த படத்தில் நடித்த நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் அட்லி குறித்து நடிகர் ஷாருக்கான் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகை தீபிகா படுகோனே, யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
பான் இந்தியா படமாக தயாராகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜவான் படத்தின் முன்னோட்டம் / டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஷாருக்கான பல கெட்டப்புகளில் வரும் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இதனிடையே ஜாவன் படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் விதமாக தற்போது மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ள ஷாருக்கான் #AskSRK என்ற ஹெஷ்டேக்குடன் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். இதில் படத்தை பற்றி அதிகம் பேச மாட்டேன் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிப்பேன் என்று கூறியதை தொடர்ந்து எப்போதும்போலவே, ரசிகர்கள் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் தங்களது கேள்விகளால் நிரப்பி வருகின்றனர். இதில் குறிப்பாக ஜவான் படத்தில் நடித்து வரும் தென்னிந்திய நட்சத்திரங்கள் பற்றிய கேள்விகள் அதிகம் இருந்தது.
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் அட்லி குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஷாருக்கான், அட்லி மிகவும் கூலாக இருப்பவர். கடினமாக உழைத்து, படத்தில் என்னை சிறப்பாக தோற்றமளிக்க செய்துள்ளார். அவரின் பணிகள் சூப்பர். அவருக்கும் மனைவி ப்ரியாவுக்கும் மகன் மீருக்கும் வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜவான் டிரெய்லரின் இறுதியில் ஷாருக் ஒரு பழைய பாடலுக்கு நடனமாடுவது போல் காட்சி உள்ளது. ஒட்டுமொத்த டிரெய்லரின் கூஸ்பம்பான இந்த காட்சி குறித்து கேட்டபோது, இதற்கு காரணம் அட்லி தான். இந்த பாடல் அட்லியின் யோசனை. அதே சமயம் நடனம் மற்றும் எல்லாவற்றிலும் எனக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ஷாருக் மனம் திறந்து பேசினார்.
இதில் நயன்தாரா ஸ்வீட் பர்சன் என்று கூறியுள்ள ஷாருக் விஜய் சேதுபதி ஒரு நடிப்பு பைத்தியக்காரன் என்று பாராட்டி பேசியுள்ளார். மேலும் இந்த படத்தில் தமிழில் ஒரு பாடலின் சில வரிகளைப் பாடுங்கள் என்று சொன்னார்கள். அப்போது படத்தின் முழு யூனிட்டும் சென்னையில் மிகவும் இருந்த்து இனிமையான தருணம். இதுதான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது என்று கூறியுள்ளார். ஜவான் படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னிந்திய நட்சத்திரங்களுடன் பணியாற்றிய ஷாருக், படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஷாருக், நிறைய தென்னிந்தியப் படங்களைப் பார்த்து ஜவானுக்காகத் தயாரானேன். நான் அட்லியின் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். விஜய் சார், அல்லு அர்ஜுன் ஜி, ரஜினி சார், யாஷ் மற்றும் பல நட்சத்திரங்கள் மொழியைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். அதனை தெரிந்துகொண்டு அதன் பிறகு என்னுடைய சொந்த கதாபாத்திரத்திற்காகவும் தயாராகிவிட்டேன். இப்போது ஜவானில் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளர்.
ஷாருக்கான் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில், கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஷாருக் தமிழகத்தில் பிரபலமானார். இந்த படத்தில் சாகேத் ராமின் (கமல்) நெருங்கிய நண்பரான அம்ஜத் அலி கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் ஷாருக்கான் தனது தமிழ் வரிகளுக்கு டப்பிங் செய்திருந்த நிலையில், சம்பளம் வாங்காமல் ஷாருக் நடித்ததாக சமீபத்தில் கமல் தெரிவித்தார். இதற்கிடையில், ஜவான் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/