கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது. இதற்கு தமிழ் சினிமா துறை மட்டும் விதிவிலக்கு அல்ல. தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பு பணிகள் தாமதமானது. ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டதால் தமிழ் சினிமா துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
தற்போது சினிமா துறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், தமிழக அரசு திரையரங்குகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
இயகுனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் உள்ளிட்ட பிற பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்ற தமிழக அரசின் அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவின் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதி தள்ளி வைத்தார். தற்போது, நவம்பர் 25ம் தேதி மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால் படத்தின் பார்வையாளர்களும் வியாபாரமும் குறையும் என்று தயாரிப்பாளர் கவலை தெரிவித்துள்ளார்.
அதனால், தமிழக அரசின் புதிய விதியை மறுபரிசீலனை செய்யக் கோரி ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமிழக அரசின் புதிய விதி ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தை எப்படி பாதிக்கும் என்று விளக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சில நாட்களுக்கு தமிழக அரசின் புதிய விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"