சிம்புவின் ஆவேச பேச்சு: கொதித்தெழுந்த ரசிகர்கள்!

பொதுமக்கள் போராடியது கடைசியில் இறந்து போகவா?

நடிகர் சிம்பு தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் இப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் என்னவென்றால் அது தூத்துக்குடியின் அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தான். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைப்பெற்ற 100 ஆவது நாள் போராட்டத்தில் தான் இந்த துயரம் அரங்கேறியது.

கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் இதற்கான எதிர்ப்பு குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சிம்பும் இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கருப்பு சட்டை நடிகர் சிம்பு ஆவேசத்துடன் பேசி இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 2 நிமிடத்திற்கு மேலாக சிம்பு இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இதில் சிம்பு பேசியிருப்பது. “பிரச்னைகள், போராட்டங்கள் தற்போது உயிரிழப்பு. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். தன் அடிப்படை உரிமைக்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்காகவும் போராடியவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் போராடியது கடைசியில் இறந்து போகவா?

தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? மக்கள் விரும்பி வாக்களித்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை. இந்த விஷயத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் செய்திகள் தேவையில்லை.தற்போது நமக்கு மாற்றம் தேவை. இந்த அரசை நீக்க வேண்டும். என்னுடைய நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே உள்ளது. மற்றவை பற்றி எனக்குக் கவலை இல்லை

இந்த வீடியோவில் நான் அங்கிலத்தில் பேசி இருப்பதற்கு காரணம் இருக்கிறது. காரணம், இதற்கு பின்னால் இருப்பவர்கள் இதுப்பற்றி புரிந்துக் கொள்ள வேண்டும். போராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா? மாநில அரசு இதுவரை என்ன செய்தது? இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்.” என்று ஆவேசத்துடன் பேசி முடித்துள்ளார்.

சமீப காலமாக அரசியல் குறித்து கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வரும் நடிகர் சிம்பு, தமிழக அரசை நேரடியாக சாடும் வகையில் இந்த வீடியோவில் பேசி இருப்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

×Close
×Close