சிம்புவுக்கு பேனர் வைக்கும் விவகாரத்தில் கொல்லப்பட்ட ரசிகர் மதன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி கண்ணீர் விட்ட நடிகர் சிம்பு வீடியோ வைரலாகி வருகிறது.
மயிலாப்பூர் சிம்பு ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மதன். அவரும் அவரது நண்பர் தீபக்கும் இணைந்து மற்றொரு நண்பர் மார்ட்டின் திருமணத்திற்கு வல்லவன் ஃப்ரண்ட்ஸ்; பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். இந்த பேனரை எடுக்குமாறு குமரேசன் என்பவர் மதனிடம் கூற, பின்னர் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ரசிகர் வீட்டில் நடிகர் சிம்பு
அந்த கைகலப்பு காரணத்தால், குமரேசன் தரப்பினர் மதனை அரிவாளால் வெட்டிக் கொன்றனர். அப்போது சிம்பு தமிழகத்தில் இல்லாத காரணத்தால், அவரின் தந்தை டி. ராஜேந்திரன் மதனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சிம்புவோ, “எனது மிகப்பெரிய பலம் என் ரசிகர்கள். ஒரு கட் அவுட் பிரச்சினையால் என் ரசிகன் கொல்லப்பட்டிருக்கிறான். இந்தப் பிரச்சனைக்காக ஒரு உயிர் போய்விட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் எனக்கு யாரும் இனி கட் அவுட், பேனர் வைக்காதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் மதனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தானே ஒட்டி ரசிகருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் இன்று தேனாம்பேட்டையில் உள்ள மதன் வீட்டிற்கு சிம்பு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மதன் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறிய சிம்பு, கண்ணீர் விட்டு அழுதார். பின் மதனின் குழந்தையை கொஞ்சி அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.