நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார் தனது தாயாரை நினைத்து மேடையில் கண் கலங்கினார்.
பழம்பெறும் நடிகரான சிவகுமார் பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழக நெஞ்சங்களில் நிறைந்திருப்பவர். இவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
கடைக்குட்டி சிங்கம், சுல்தான் ஆகிய படங்களில் விவசாயத்தை உயர்த்திப் பிடிக்கும் கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்திருந்தார். திரையில் மட்டும் விவசாயம் சம்பந்தப்பட்ட கருத்து முன்வைத்துவிட்டு அத்துடன் நிறுத்திவிடாமல் நிஜ வாழ்க்கையில் அவர் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக உழவன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை அவர் தொடங்கியுள்ளார்.
இந்த அமைப்பு சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது தந்தை சிவகுமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பை நடிகர் சிவகுமாரின் மகன் தொடங்கவில்லை ஒரு ஏழை விவசாயி பெண்ணின் பேரன் தொடங்கியிருக்கிறார். எனது தாயார் ஏழை விவசாயி. விவசாய சம்பந்தப்பட்ட பலர் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் நான் எனது பிள்ளைகளாகவே பார்க்கிறேன்.
விவசாயி என்றால் எலும்பும்தோலுமாக இருப்பான், தோலில் துண்டு அணிந்திருப்பான் என்பதை தாண்டி இளம் தலைமுறையினர் நவீன விவசாயத்தை செய்து விவசாயத்தை காக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அமைப்பை கார்த்தி தொடங்கியிருக்கிறார்.
தேவையில்லாமல் பணத்தை செலவழித்து படித்து பிறரை முதலாளி ஆக்குவதை நிறுத்திவிட்டு நாம் நமது சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்து நம்மையும் நமது சமூகத்தையும் காப்பதே சிறப்பானது என்று நான் கருதுகிறேன்.
நான் பத்து மாதக் குழந்தையாக இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். நான் பல மேடைகளில் கூறியிருக்கிறேன். ஒருவேளை எனது தாயார் இறந்து எனது தந்தையார் உயிருடன் இருந்திருந்தால் நான் அனாதை ஆகியிருப்பேன்.
ஏனென்றால் தந்தையால் பத்து மாதக் குழந்தையை எடுத்து வளர்த்துவிட முடியாது. ராகி, கம்பு, தினை எங்கள் மண்ணில் விளையவில்லை. எருக்கஞ்செடியும், அரளி விதையும் தான் அதிகம் விளையும். எருக்கம் பால் கொஞ்சம் கொடுத்திருந்தாலும் நான் உயிரிழந்திருப்பேன். ஆனால், அத்தனை கஷ்டத்திலும் சாமி கொடுத்த குழந்தையை விட்டுவிடக் கூடாது என்று என்னை வளர்த்து ஆளாக்கினார் எனது தாயார் என்றார் சிவகுமார்.
தாயாரை பற்றி இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது அவர் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கண்கலங்கினார்.