/indian-express-tamil/media/media_files/2025/08/18/download-6-2025-08-18-14-33-46.jpg)
திரைத்துறையில் "நடிப்பின் நட்சத்திரம்" என்ற புகழை பெற்றவர் சிவாஜி கணேசன். அவரின் ஆழ்ந்த நடிப்பு திறமை மட்டுமன்றி, அவர் மனிதராக கொண்டிருந்த மதிக்கத்தக்க பண்புகள், சமூகத்தின் மீது வைத்த அக்கறை ஆகியவை கூடுதல் கவனத்திற்கு உரியவை. இன்று, பொதுமக்கள் பெரிதாக அறியாத அவரது நன்கொடை செயல்கள் குறித்து பார்க்கலாம்.
சினிமா உலகத்தில் அவர் சாதித்த உன்னத உயர்வுகளுக்கு ஒப்பாக, சமூக நலனுக்காக அவர் செய்த சேவைகளும் தனிச்சிறப்புடையவை. கல்வி, மருத்துவம், பொருளாதார உதவி என பல வழிகளில் அவர் தன்னாலான உதவிகளை வழங்கி, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
இது அவரை ஒரு நடிப்பின் வல்லுநராக மட்டுமின்றி, ஒரு வள்ளலாகவும் நிரூபிக்கிறது. தமிழ் சினிமாவில் அவர் பெற்ற புகழுக்கு அப்பாலும், அவர் ஒரு மனமுள்ள மனிதராக வெளிப்பட்ட விதம், நம்மை ஆச்சர்யப்படுத்துவதோடு, மெய்சிலிர்க்கவும் செய்கிறது.
அவரது வாழ்க்கை, கலைஞர்களும் பொதுமக்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும்.
1953 முதல் 1993 வரை, நாற்பது ஆண்டுகளில் சிவாஜி கணேசன் நன்கொடையாக வழங்கிய மொத்த தொகை சுமார் ரூ.310 கோடியாக இருப்பது மிகவும் ஆச்சர்யமூட்டும் தகவல்.
அவரது வாழ்நாளில் புயல், வெள்ளம், கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளுக்கு அவர் உதவிகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, 1968ஆம் ஆண்டில் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரிக்கு ரூ.1 லட்சம், வேலூர் மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
அதே ஆண்டில் உலகத் தமிழர் மாநாட்டிற்காக திருவள்ளுவர் சிலை நிறுவ ரூ.5 லட்சம் வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
சிவாஜியின் நன்கொடைகள் அரசியலுக்கும் உறுதுணையாக இருந்தது. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜருக்கு கட்சி நிதியாக ரூ.3.5 லட்சம் கொடுத்திருப்பது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ரூ.50 ஆயிரம், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நிதியுதவி போன்ற பல வரலாற்றுச் செயல்கள் அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
அன்னதானம், மருத்துவ முகாம், கல்வி உதவித்தொகை என பல வழிகளில் அவர் நேரடியாக மக்களுக்கு உதவியிருக்கிறார்.
தனது சொந்தமான வருமானத்திலிருந்து பங்கெடுத்துக்கொண்டு, இவரது வாழ்நாளில் நன்கொடையாக கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.310 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இது அண்மையில் வெளியான அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய தகவல் ஆகும். உண்மையில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழ்ந்தார் என்பதே உண்மை.
அவரது மனப்பான்மை, பெருந்தன்மை, தனிமனிதக் கொடைகளே அவரை இன்று வரை மக்கள் மனதில் அழியாதவராக்கி உள்ளது என்றே கூறலாம்.
சிவாஜி கணேசன் மீது உலகத் தலைவர்களும் மரியாதை செலுத்தியுள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி எசன் ஹோவருடன் அவர் சந்தித்த ஒற்றை இந்திய நடிகர் என்ற பெருமை அவருக்கே உரியது.
இந்துக்களின் உலகளாவிய மாநாட்டிலும் இந்தியாவின் குரலாக பேச அவரை அழைத்திருந்தார்கள். இப்படிப் பட்ட பல செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அறியப்படாமல் போனாலும் அவர் என்றும் நம் அனைவரின் மனதில் இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.