இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சூரி தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெறித்தனமான ரசிகன் என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார். சூரிக்கு இப்படி ஒரு பின்னணியா என்று ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்த நகைச்சுவை நடிகர் சூரி, இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார். அதிலிருந்து சூரிக்கு சினிமாவில் ஏறுமுகம்தான். விஜய், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக நடித்து உச்சம் தொட்டார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிசியாக இருந்த சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
ஆடுகளம், வட சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில், சூரி உடன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா
அண்மையில் நடந்த விடுதலை படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில், வெளியான படத்தின் டிரெய்லர் பார்த்தவர்களை பிரமிக்கச் செய்தது. அதில் சூரியின் நடிப்பும் கடினமான உழைப்பு தெரிந்தது.
இந்நிலையில், சூரி விடுதலை படத்தில், நடித்தது குறித்து, தனது குடும்ப பின்னணி, பால்ய காலம் குறித்த நினைவுகளை அவருக்கே உரிய நகைச்சுவை உடன் பகிர்ந்துகொண்டார்.
சன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற சூரியிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளினி, உங்களுக்கு இன்னொரு பேர் இருக்கிறது. அதற்கும், சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கிறது அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்க சூரி அதைப் பற்றி கூறுகிறார்.
நடிகர் சூரி கூறியிருப்பதாவது: “சூரி என்பது என்னுடைய 3வது பெயர். என்னுடைய உண்மையான பெயர் ராமன், ஏனென்றால், நாங்கள் இரட்டை சகோதரர்கள். எனக்கு ராமன், ட்வின் தம்பிக்கு லட்சுமனன். ராம – லட்சுமனன் என்று பெயர் வைத்தார்கள்.
நான் தலைவருடைய பயங்கரமான ரசிகன். எங்கள் ஊரில் ரசிகர் மன்றம் எல்லாம் திறந்து இருக்கிறோம். 1991-ல் தளபதி படம் ரிலீசானது. அப்போது, தீபாவளிக்கு வீட்டில் புதுத் துணி எடுத்து வைத்திருந்தார்கள். 90களில் சட்டையில் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தை இஸ்திரிப் பெட்டி வைத்து தேய்த்துப் போடுவார்கள். அதனால், நானும் ரஜினி சார் படத்தை சட்டையில் தேய்த்து போட வேண்டும் என்று முடிவு செய்தேன். சட்டையை எடுத்துகொண்டு சைக்கிளில், டவுனுக்கு போய், இஸ்திரி கடைக்காரரிடம் ரஜினி படத்தை தேய்த்து கொடுங்கள் என்று கேட்டேன். ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், கடைசி வரை தேய்த்து கொடுக்கவில்லை. நேரம் ஆகிவிட்டதால் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
ரஜினி படத்தை நானே சட்டையில் வைத்து தேய்க்க முடிவு செய்து சில்வர் டிஃபன் பாக்ஸில் நெருப்பைக் கொட்டி தண்ணிர் தெளித்து தலைவர் ரஜினி படத்தை வைத்து தேய்த்துப் பார்க்கிறேன். படத்தைக் காணவில்லை. துணி பொசுங்கிவிட்டது. பணியாரம் சுட்டுக்கொண்டிருந்த எங்க அம்மா, புதுத் துணியைப் பொசுக்கிவிட்டேன் என்று திட்டிக்கொண்டு விலக்குமாறு எடுத்துக்கொண்டு விரட்டினார். அப்படியே, ஓடிப்போய் அன்றைக்கு தளபதி படத்தை சரஸ்வதி தியேட்டரில் பார்க்கப்போனேன். தலைவரை யாராவது கைநீட்டி பேசினால், ஒரு சத்தம் போடுவேன். முதல் 3-4 வரிசையில் இருந்தவர்களுக்கு ஒரே தொந்தரவாக இருந்தது. எனது அலப்பறை தாங்க முடியாமல், போலீஸ் தேடி உள்ளே வந்துவிட்டது. அமைதியாக இருந்துவிட்டேன். தளபதி படத்தில் அரவிந்தசாமி தலைவரைப் பார்த்து கைநீட்டி பேசும்போது, மீண்டும் சத்தம் போடவே, போலீஸ் வந்து என்னையும் நண்பர்களையும் வெளியே அழைத்துச் சென்று விட்டுவிட்டார்கள்.
வீட்டுக்கு வந்ததும், பெயர் ராமன் எங்கள் தாத்தாவின் பெயர் என்பதால், எங்கள் அம்மா எனது பெயரை சாமி என்று கூப்பிட்டார்கள். தளபதி படத்தில் தலைவர் பெயரான சூரியா என்ற பெயரை வைத்துக்கொண்டேன். இனிமேல் எனது பெயரை சூரியா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று கூறினேன்.
அதன் பிறகு, சென்னைக்கு வந்து சினிமாவில் வேலை செய்தபோது, சூரியா என்ற பெயர் சூரி ஆனது. அதன் பிறகு, ரஜினி சாருடன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலைவர் உடன் நடிப்பதை எனது நண்பர்களுக்கு எல்லாம் போன் போட்டு கூறினேன். எனது குடும்பத்தினருக்கு கூறினேன். மறுநாள், ரஜினி சாருடன் நடித்தேன். சிவகார்த்திகேயன் உடன் காம்பினேஷன் நல்லா இருக்கிறது என்று பாராட்டினார். எனது சூரி என்ற பெயரே கெஜட்டில் எல்லாவற்றிலும் இருக்கிறது என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.
நடிகர் சூரி தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெறித்தனமான ரசிகன் என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார். சூரிக்கு இப்படி ஒரு பின்னணியா என்று ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“