தமிழ் சினிமா உலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்து, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, நகைச்சுவை நடிகராக வளர்ந்து, இன்றைக்கு ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சூரியின் வளர்ச்சி மிகப்பெரியது. அதற்காக அவருடைய உழைப்பு ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். இதையடுத்து, கருடன் படத்தில் தனது ஆக்ஷன் நடிப்பின் மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார்.
இந்த சூழலில்தான், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்ற சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ் வினோத்ராஜ்தான் கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தாயாரித்துள்ளார். கொட்டுக்காளி படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருது பெற்றுள்ளது.
53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது. ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. மேலும், 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.
20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது. பல சரவதேச விருதுகளைப் பெற்றுள்ளதால் கொட்டுக்காளி திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொட்டுக்காளி விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று விடுதலை, கருடன் வரிசையில் சேருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“