“அற்புதமான வாழ்வியலை கொடுக்கக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜா, காலத்திற்கும் நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்தான் இளையராஜா" என்று புகழ்ந்து கூறிய நடிகர் சூரி, கங்குவா சிறந்த படம் என்று பாராட்டியுள்ளார்.
விடுதலை 1, 2, கருடன் என வெற்றி படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, தனது சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள்ள நடிகர் சூரி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திங்கள்கிழமை (நவம்பர் 18) சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பின்னர், வெளியே வந்த நடிகர் சூரியுடன், கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் பலரும் தங்கள் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, சூரி நடித்துள்ள விடுதலை 2 படம் குறித்தும், அதில் இளையராஜாவின் பாடல்கள் குறித்தும் பேசினார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா படம் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பி வரும் நிலையில், கங்குவா சிறந்த படம், திரையரங்குக்கு குடும்பத்துடன் சென்று பார்த்தேன் என்று பாராட்டினார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, “கடந்த வருடமும் திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்திருந்தேன். இந்த ஆண்டும் ஐயாவின் ஆசியைப் பெற வந்திருக்கிறேன். வரிசையாக நிறைய படத்தில் நடிக்க உள்ளேன். விடுதலை 2 இப்போது வரப்போகிறது. அடுத்த மாதம் 20-ம் தேதி என்று நினைக்கிறேன். விடுதலை படத்தின் முதல் பாகம் எப்படி உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்ததோ, அதுபோலவே, விடுதலை 2-ம் பிடிக்கும்” என்று கூறினார்.
கங்குவா படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூரி, “கங்குவா படம் சிறப்பாக உள்ளது. ஒரு ரசிகரா, படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்த்தேன்.” என்று பாராடினார். மேலும், “எதிர்மறையாக சிலர் சொல்கிறார்கள். அதையெல்லாம் நாம் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எதிர்மறை விமர்சனங்களால் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதிகமானோர் பாசிட்டிவ் கருத்துக்களையே சொல்கிறார்கள். கங்குவா படக்குழு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.” என்று நடிகர் சூரி பாராட்டினார்.
‘விடுதலை 2’ படத்தில் இளையராஜாவின் பாடல் குறித்துப் பேசிய நடிகர் சூரி, “‘விடுதலை 2’ படத்தில் இளையராஜாவின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. உலகின் தலைசிறந்த மனிதர்களில் இளையராஜா ஒருவர். 82-வயதிலும் இசையை எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார். அவர் உள்ள சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அற்புதமான வாழ்வியலை கொடுக்கக்கூடிய இசையமைப்பாளர். காலத்திற்கும் நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்தான் இளையராஜா” என்று நடிகர் சூரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“