சூர்யா... திரையுலகத்தினர் மட்டுமல்ல... அரசியல்வாதிகளில் இருந்து சராசரி மக்கள் வரை 'எப்படி இவ்வளவு தைரியமாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்விகள் எழுப்பியதோடு மட்டுமில்லாமல், அதனை எதிர்த்து போராட வேண்டும் என்ற தொனியில் பேசினார்?' என ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
வழக்கத்துக்கு மாறாக, இம்முறை ஆச்சர்ய சூர்யாவாக தோற்றமளிக்கும் சரவணனுக்கு நாளை பிறந்தநாள். ஆம்! இன்று 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சூர்யா.
சினிமா மீது பெரிதாக ஆர்வம் இல்லாத சூர்யா கார்மெண்ட்ஸ் ஒன்றில் முதன் முதலாக பணியாற்றினார். எட்டு மாதங்கள் அங்கு பணிபுரிந்த சூர்யா, கடைசி வரை தான் சிவகுமாரின் மகன் என்பதை சொல்லவேயில்லை. ஆனால், விதி விடுமா என்ன! 1995ம் ஆண்டு வசந்த இயக்கிய 'ஆசை' திரைப்படத்திலேயே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், சினிமாவின் மீது பெரிய ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்பை புறக்கணித்தார். ஆனால், அதே வசந்த் 1997ல் இயக்கிய 'நேருக்கு நேர்' திரைப்படத்தில் சூர்யாவை அந்த விதி நடிக்க வைத்தது. அதுவும் அஜித் வடிவத்தில் வந்து. விஜய்யின் நண்பனாக அஜித் இரண்டு நாட்கள் வரை நடித்த பிறகு, இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ள, அவசர இணைப்பாக உள்ளே வந்தவர் தான் சூர்யா.
அதன் பின்னர், ‘காதலே நிம்மதி’ (1998), ‘சந்திப்போமா’ (1999)....(சந்திப்போமா படத்தின் நாயகி, இந்த பிக்பாஸ் சீசனில் அந்த வீட்டையே ஒரு கலக்கு கலக்கிய வனிதா என்பது ஹைலைட்) ‘பெரியண்ணா’ (1999)... (இப்படத்தில், ஸ்டைலுன்னா ஸ்டைலு தான் எனும் பாடலை விஜய் எழுதி சூர்யாவுக்கு குரல் கொடுத்து பாடியிருப்பார்), ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ (1999), ‘உயிரிலே கலந்தது’ (2000) போன்ற படங்களில் நடித்த சூர்யாவுக்கு, 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யாவை வெகுஜன மக்களும் ரசித்த முதல் படம் என்றால் இதுதான். விஜய்யின் நண்பன் கேரக்டரில் முதலில் அஜித் நடிக்கவிருந்த இப்படத்தில், பிறகு சூர்யா ஒப்பந்தமானார்.
அவ்வெற்றியைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘நந்தா’ படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்து, அவரை முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. இன்னும் சொல்லப்போனால், சூர்யாவுக்கு நடிப்பைக் கற்றுத் தந்த படம் நந்தா என்றால் அது மிகையாகாது. பின்னர், ‘உன்னை நினைத்து’ (2002), ‘ஸ்ரீ’ (2002), ‘மௌனம் பேசியதே’ (2002) என்று ஹார்ட் அன்ட் சாஃப்ட் கேரக்டரில் நடித்து வந்த சூர்யாவுக்கு, மனைவி....சாரி அப்போதைய காதலி ஜோதிகா மூலம் வந்த மிகப்பெரிய ஆஃபர் காக்க காக்க.
விஜய்க்காகவே கெளதம் மேனன் எழுதிய கதை காக்க காக்க. அப்படத்தின் கதையையும், விஜய்யிடம் கெளதம் சொல்லியிருந்தார். ஆனால், அப்போது 'மதுர' படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்து வந்த விஜய், காக்க காக்க கதையை சில காரணங்களுக்காக வேண்டாம் என சொல்ல, இந்த விஷயம் ஜோதிகாவுக்கு தெரிந்தது. உடனே, சூர்யாவை கௌதமிடம் ஜோ ரெஃபர் செய்ய, அன்புச் செல்வனாகவே வாழ்ந்து முதல் மெகா பிளாக் பஸ்டர் படத்தைக் கொடுத்தார் சூர்யா.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1362-300x217.jpg)
பிறகு, பிதாமகன், பேரழகன் படங்கள் சூர்யாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல, 2005ல் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’ திரைப்படம், சூர்யாவை உச்ச நட்சத்திரம் வரிசையில் அமர வைத்தது. பிறகு 'வாரணம் ஆயிரம்' படத்தில் பல வர்ணங்கள் பூசிய சூர்யா, 'அயன்' மூலம் மற்றொரு அட்டகாசமான கமெர்ஷியல் வெற்றியை பதிவு செய்தார்.
2010ல் வெளியான 'சிங்கம்' திரைப்படம் சூர்யாவின் கமர்ஷியல் பாதையை விஜய், அஜித் அளவுக்கு விரிவுப்படுத்தியது. அதாவது சிக்ஸ்பேக், கடின உழைப்பு கொட்டி நடிக்க வேண்டியது போன்ற எந்த சாகசமும் இல்லாமல், திரையில் தோன்றினாலே மாஸ் எனும் அந்தஸ்த்துக்கு சூர்யாவை கூட்டிச் சென்றது சிங்கம்.
படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் சூர்யா எனும் நடிகனின் பங்களிப்பு என்பது திரையில் நம்மை மிரட்டும். அதுவே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமும் கூட.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1363-300x217.jpg)
'அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நலனுக்காகவும், பாதியிலே பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தொண்டாற்றி வருகிறார். இவரது அகரமில் கல்விப் பயின்றோர், இன்று பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர்.
அந்த நம்பிக்கையோ என்னமோ, புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா மிக காட்டமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்து பல தரப்பில் இருந்து எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்; அதற்கு இணையாக ஆதரவையும் பெற்று வருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து.
'‘சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது' என்று ரஜினி கூறியது போல, திரையில் மேலும் பல முகங்கள் காட்டி, திரையை ஆள சூர்யாவுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்!.