தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் முதல் சமூக அக்கறை உள்ள படங்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும்படியான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020ஆம்ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு பல தரப்பினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசைக்காக ஜீ.வி பிரகாஷ் குமாருக்கு, சிறந்த திரைக்கதைக்காக ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அதில் அவரது திரைப்பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் என்னோட நண்பர்களிடம் நடிக்க போறேன்னு சொன்னேன். என் நண்பர்கள் என்னை பார்த்து சிரிச்சாங்க, நீ நடிக்க போறியா என்றார்கள். இதற்காகவே படம் பண்ணவேண்டும் என்று நினைத்தேன். அப்படி நடிக்க ஆரம்பித்த படம் தான் நேருக்கு நேர். அப்படத்திற்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் கொடுத்தாங்க. அப்போது எங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. காசுக்காக நடிக்க வந்தேன். அதன்பின் சினிமாவை விரும்பி தொடர்ந்து நடித்து வருகிறேன" என்று அதில் கூறியுள்ளார்.