scorecardresearch

சூரியாவின் சூரரைப் போற்று ஓ.டி.டி-யில் வெளியீடு; திரையுலகினர், ரசிகர்கள் கருத்து

இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூரியா அறிவித்துள்ளார்.

contempt of court against surya
நடிகர் சூர்யா

இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூரியா அறிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூரியாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூரியா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. ஆனால், பொது முடக்கம் காரணமாக சூரரைப் போற்று படம் திரையரங்கில் வெளியாவது தள்ளிப்போனது. இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான சூரியா அந்தப் படத்தை அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சூரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில் பிரச்னைகளில் மூழ்கிவிடாமல் நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போடுவது முக்கியம்.

இயக்குனர் சுதா கொங்குராவின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிக சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்க மனம் ஆவல் புரிகிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை/ பல்துறை கலைஞர்களின் கற்பனைத் திறனையும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை.

எனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதுவரை 8 படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. மேலும், 10 படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னை சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவு எடுப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன்.

அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழி அவெளியிட முடிவு செய்திருக்கிறேன். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சேர்ந்தவர்களும் என் திரைப்படத்தில் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகள், உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக ‘சூரரைப் போற்று’ நிச்சயம் அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள் கடினமாக உழைத்து ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

இருப்பதை அனைவருடன் பகிர்ந்து கொள்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் வாழ்த்தும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இந்த நெருக்கடி சூழலை மன உறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor suriya starrer soorarai pottru to release on amazon prime video ott platform