தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாளைக் கொண்டாட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை தமன்னா, நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சூர்யாவின் அசத்தலான காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகரான சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சரவணன் என்ற தனது இயற்பெயரை மாற்றிக்கொண்டு சூர்யா என்ற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் தன்னை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டு ஜொலித்து வருகிறார்.
நடிகர் சூர்யா திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண்குழந்தை உள்ளனர். சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக களம் இறங்கி வெற்றிப்படங்களையும் தயாரித்துள்ளார்.
சூர்யா சினிமாவில் மட்டுமல்லாமல், அகரம் அறக்கட்டளையைத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்க்கல்வி பெறுவதற்கு உதவி செய்து வருகிறார். அகரம் அறக்கட்டளை மூலம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பொறியியல் மற்றும் பட்டப் படிப்பை முடித்து நல்ல நிலையில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக பிரகாசிக்கு சூர்யாவுக்கு ஜூலை 23ம் தேதி 45வது பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் நடிகர் சூர்யாவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சூர்யாவைச் சுற்றி பாலம் அமைக்கப்பட்டிருக்கும் அசத்தலான காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதே போல, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா டுவிட்டரில் சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் சூர்யாவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவருடைய காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"