சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் டீசரை ரோகிணி திரையரங்கில் திரையிடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதற்கான அனுமதி முறையாக பெறப்பட்டுள்ளதா என்று சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் (ஜூலை 23) நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யாவின் சமீபத்திய திரைப்படங்களான 'கங்குவா', 'ரெட்ரோ 'உள்ளிட்டவை விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஓடிடி-யில் வெளியான சூர்யாவின் 'சூரரைப் போற்று', 'ஜெய்பீம்' ஆகிய படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றன. இதனால், திரையரங்கில் வெளியாகும் திரைப்படத்தின் மூலம் சூர்யா கம்பேக் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்த சூழலில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் 'கருப்பு' திரைப்படம், கிராமிய கதைக்களத்தில் இருப்பதாக தெரிகிறது. இதற்கு ஏற்றார் போல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வேஷ்டி, சட்டையில் சூர்யா தோற்றமளிக்கிறார். எனவே, 'வேல்' திரைப்படம் போன்று இப்படமும் ஹிட்டாகும் என்று சூர்யாவின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் போது அதனை திரையரங்கில் திரையிடுவது ஒரு ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று வெளியாகும் 'கருப்பு' திரைப்படத்தின் டீசர், சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. ஆனால், இது போன்ற டீசர் வெளியீட்டை காண ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், 'கருப்பு' திரைப்படத்தின் டீசரைக் காண சுமார் ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சூர்யாவின் கருப்பு பட டீசரை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் இன்று மாலை பார்க்க கட்டணம் 57 ரூபாய்.
நீங்கள் யூட்யூபில் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது 57 ரூபாய் தந்து தியேட்டரில் பாரக்க போகிறீர்களா?
வழக்கமாக..டீசர், ட்ரெய்லர்கள் எல்லாம் நாம் தியேட்டரில் காணும் வேறொரு படத்தின்போது வெளியாகும். அதற்கு தனி கட்டணம் இல்லை.
கடந்த சில வருடங்களாக இதற்கென்று தனி ஷோ போட்டு..டிக்கெட் விற்கிறார்கள்.
இது சட்டப்படி அரசு அல்லது நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடக்கிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்கள் இடையேயும் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு திரையரங்கம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.