தென் இந்தியாவின் பிரபல நடிகையாக இருந்தவர் சவுந்தரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பன்மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். கோலிக் குண்டு கண்கள், மாம்பழம் போன்ற கன்னம், கோவைப் பழ உதடுகள் மற்றும் பால் போன்ற சர்மம், இவரின் அழகிற்காகவே ரசிகர் பட்டாளம் குவிந்தது. தென் இந்தியாவில் இவரின் அழகு மற்றும் நடிப்புக்காகவே புகழ் கொடி நாட்டப்பட்டது.
சவுந்தர்யாவின் சொந்த ஊர் கர்நாடகம். பெங்களூருவில் வசித்த இவர் தனது ஜூனியர் காலெஜ் படிப்பின் பின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு சினிமா துறையில் கனவு கொண்டு தனது மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 1993ம் ஆண்டு கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
கமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம் படங்களிலும் நடித்தார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் உச்சத்தில் இருந்தார்.
2004-ல் பெங்களூரு அருகே தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றபோது விமான விபத்தில் பலியானார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக பி.வாசு இயக்கிய ஆப்தமித்ரா கன்னட படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம்தான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி என்ற பெயரில் வந்து வசூல் அள்ளியது.
இவ்வாறு தென் இந்தியா முழுவதும் புகழ் பெற்று அகால மரணம் அடைந்த சவுந்தர்யாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கப் போவதாக பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி அறிவித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. சவுந்தரியா வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது.