வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்த நடிகர் வெங்கல் ராவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு நடிகர் வடிவேலு நிதியுதவி செய்துள்ளதாகவும், போனில் நலம் விசாரித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. 90-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த தனக்கென தனி பாணி வகுத்து காமெடியில் முன்னணியில் இருந்தவர். ஒரு டீமை உருவாகி அதை வைத்து காமெடி காட்சிகளை உருவாகி வந்தார். ஒரு கட்டத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்பு இல்லாமல் போனபோது அவரது டீமில் இருந்த அனைவருமே வாய்ப்பு கிடைக்காமல் இருந்தனர்.
அந்த வகையில் வாய்ப்பு இல்லாமல் போனவர் தான் வெங்கல் ராவ். பல ஆண்டுகளாக சினிமாவில் ஃபைட்டராக இருந்த இவர், ஒரு கட்டத்தில் சண்டைக்கு உடல் ஒத்துழைக்காததால், காமெடி நடிகராக வடிவேலுவின் குழுவில் இணைந்தார். வடிவேலுவுடன் தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவ், வடிவேலு ரீ-என்டரி ஆன நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் சரியாக போகாத நிலையில், வெங்கல் ராவ் குறித்து அதன்பிறகு வேறு எந்த தகவலும் இல்லை.
இதனிடையே தற்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ள வெங்கல் ராவ், எனக்கு கை, கால் விழுந்து போச்சு, நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல, பணம் இல்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லை. சினிமா நடிகர் சங்கங்கள் எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், வெங்கல் ராவ்க்கு நடிகர் வடிவேலு உதவி செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், மற்ற நடிகர்களில் யார் வெங்கல் ராவுக்கு உதவி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது நடிகர் வடிவேலு வெங்கல் ராவுக்கு ரூ1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாகவும், வெங்கல் ராவுடன் வடிவேலு போனில் நலம் விசாரித்ததாகவும், விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும், வெங்கல் ராவ் குடும்பத்தினர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகர் சிம்பு 2 லட்சம், கே.பி.ஒய்.பாலா ஒரு லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ25 ஆயிரம் என மற்ற நடிகர் நடிகைகள் வெங்கல் ராவுக்கு நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“