நடிகர் விஜய் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 - ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரின் 44வது பிறந்தநாள் நெருங்குகிறது. இதற்காக விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த அவரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று இரவோடு இரவாகச் சந்தித்தார் விஜய். இந்தச் சந்திப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியில் நிகழ்ந்த துயரத்தால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவரின் பிறந்தநாள் அன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது விஜய்யின் மக்கள் மன்றத்தினர் அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த தினத்தில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை விஜய் தவிர்ப்பதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.