நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மக்களின் தேவைக்காக இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்படுகிறது.
இதுபற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், ’தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் 'தளபதி விஜய் நூலகம்' திட்டம் தொடங்கப்படுகிறது.
முதல் கட்டமாக 11 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம் தொகுதி சி.டி.ஓ. காலனி பாலாஜி நகர் 3-வது தெருவிலும், பல்லாவரம் மும்மூர்த்தி நகர் 5-வது தெரு, கிருஷ்ணகிரியில் 3 இடத்திலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, வடசென்னை கிழக்கு, வேலூர் உள்பட 11 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்கள், கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில்ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 21 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
மொத்தம் 32 இடங்களில் நூலகத்தை தொடங்க இருக்கிறோம்.
தொடர்ந்து தளபதி விஜய்யின் ஆலோசனையின் படி 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
தலைவர்கள் வரலாறு, பொது அறிவு புத்தகங்கள், வரலாற்று கதைகள் என பல்வேறு அரிய புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். மாணவ-மாணவிகள் நல்ல முறையில் இந்த திட்டத்தினை பயன்படுத்துமாறு புஸ்சி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“