Tamil actor Vijay: நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் சன் டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிப்பரப்பானது. பேட்டியை பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தொகுத்து வழங்கினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு விஜய் பேட்டியளித்துள்ளதால், அந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது.
கேள்வி: ஏன், பல ஆண்டுகளாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கவில்லை. படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தது தான் காரணமா?
விஜய் பதில், ” அப்படி ஒன்றும் இல்லை. நேரம் எல்லாம் இருக்கு. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணல் கொடுத்தேன் அப்போ அவங்க எழுதுனது, படிக்கும் போது வேற மாதிரி இருந்துச்சு. அது, மகிழ்ச்சியாக இல்லை. என குடும்ப உறுப்பினர்கள் உட்பட சிலர் சொன்னாங்க நேர்காணல் படிக்கும் பொழுது தெனாவட்டா இருந்த மாதிரி இருந்துச்சுனு. நான் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, நான் அப்படிச் சொல்லவில்லை என்பதை விளக்கினேன். மேலும் என்னால் அதை எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் விளக்கிட முடியாது. அதனால், நேர்காணல்களில் இருந்து விலகி இருந்தேன்” என தெரிவித்தார்.
பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் பிக்சர்ஸ் நடத்தவில்லை. அதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. நேர்காணலின் போதும் நெல்சனும், விஜய்யும் விவாதிக்கவில்லை. ஆனால், விஜய் ரசிகர்களின் ஏமாற்றத்தை சரிசெய்யவே தொலைகாட்சி நேர்காணலை சன் டிவி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: நீங்க எதுக்கு ரியாக்ட் பண்ணுவீங்கனு புரிஞ்சிக்கவே முடியல? எந்த விஷயத்துக்கு கோவப்படுவீங்க?
பதில்: எனக்கு ஒன்னு பிடிச்சிருக்கா இல்லையானு தெரிஞ்சுக்கமுடிலுனு எனது குடும்பத்தினர் கூட சொல்லுவாங்க. எனக்கும் சில சமயங்களில் கோபம் வரும் ஆனா நான் ரியாக்ட் செய்ய மாட்டேன். நமது பிரச்சனைகளில் பெரும்பாலானவை கோபம் அல்லது வெறுப்பின் போது எடுக்கும் முடிவுகளிலிருந்து தான் வருகின்றன என நம்புகிறேன். எனக்கு இருக்கிறது ஒரு கொள்கை தான். எல்லாதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளனும் அவ்வளவு தான்” என தெரிவித்தார்.
2009இல் வில்லு திரைப்பபட ப்ரோமோஷன் போது, பொது வெளியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது விஜய் தனது கோபத்தை இழந்து அனைவரையும் திகைக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: அம்மா, அப்பா உறவுகள் எப்படி இருக்க வேண்டும்? இதை பத்தி உங்க கருத்து என்ன?
பதில்: அப்பா ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாக்கும் கடவுளுக்கும் ஒரு வித்யாசம் தான். கடவுள் நம்ம பார்க்க முடியாது, அப்பாவ பார்க்க முடியும் அது தான் வித்தியாசம்” என்றார்.
இந்த பதில், சமீப நாள்களாக இருவரது உறவிலும் பல கசப்பான நிகழ்வுகள் இருந்தாலும், அர்ப்பணிப்புள்ள மகனாகவே திகழ்கிறார் என்பதை காட்டுகிறது.
கேள்வி: நீங்க ஜார்ஜியாவுல சர்ச்சுக்கு போனத பார்த்தேன், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
ஆமாம். கடவுள் நம்பிக்கை இருக்கும். துப்பாக்கி படப்பிடிப்பின் போது தேவாலயத்திற்கும், கோவில்களுக்கும், அமீன் பீர் தர்காவிற்கும் சென்றிருக்கேன். எல்லா இடங்களிலும் தெய்வீக உணர்வை உணர்ந்திருக்கிறேன். என் அம்மா ஒரு இந்து, என் அப்பா ஒரு கிறிஸ்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான் எங்கு செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்று ஒருபோதும் கட்டுப்படுத்தாத குடும்பத்தில் வளர்ந்தேன். நானும் என் குழந்தைகளுக்கும் இதைத்தான் கற்றுக்கொடுக்கிறேன் என்றார்.
கேள்வி: உங்க பையன் சஞ்சய் சினிமாவுல எப்போ பார்க்கிறது?
தனது மகன் சஞ்சய் திரையில் நடிப்பதை பார்க்க மிகவும் ஆசைப்படுவதாக நடிகர் விஜய் தெரிவித்தார். அதேசமயம், அவர் விரும்பவில்லை என்றால், தனது மகனை திரையுலகில் சேருமாறு அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அவரது பதில், ஒரு தடவை பிரேமம் பட இயக்குனர் வந்தாரு எனக்கு தான் கதை சொல்ல வராருனு நினைச்சன். உங்க பையன் கிட்ட கதை சொல்லனும் சொன்னாரு, கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது. சஞ்சய் ஒத்துக்கனும் அத பண்ணனும்னு நினைச்சேன். ஆனா அவன் டைம் கேட்டான். அவன் எது பண்ணாலும் எனக்கு சந்தோஷம். நான் வற்புறுத்தவில்லை என தெரிவித்தார்.
தளபதி டூ தலைவர் பயணம்
பேட்டியின் முக்கியம்சமாக அரசியல் பயணம் குறித்து பேசிய நெல்சன், தளபதியில் இருந்து தலைவரா மாறனும்னு விருப்பம் இருக்கா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு விஜய் அளித்த பதிலில், தனது அரசியல் என்ட்ரி குறித்து எந்த ரகசியத்தையும் வெளியிடவில்லை என்றாலும், தனது அரசியல் அறிமுகத்திற்கான காலக்கெடுவை இன்னும் அமைக்கவில்லை என்பதே தெரிகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கூறிய பதிலை கடன் பெற்றுக்கொண்டார். அவர் கடவுள் முடிவு செய்தால் அரசியலுக்கு வருவேன் என்பார் ஆனால் இங்கு கடவுளுக்கு பதிலாக ரசிகர்களை விஜய் குறிப்பிட்டார். விஜய் பதிலளிக்கையில், இன்று எனது ரசிகர்கள் நான் தளபதியாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாளை நான் தலைவனாக (தலைவனாக) இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அப்படியே ஆகும் என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil