“தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு இனி அதிகாலை காட்சிகள் இருக்காது” என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது. லியோ படத்துக்கு அக்டோபர் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 9 மணி முதல் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டங்களால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், லியோ படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிகப்படவில்லை. அதற்கு பதிலாக காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், “தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு இனி அதிகாலை காட்சிகள் இருக்காது” என கூறியுள்ளார்.
திருச்சியில் நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்ய வாய்ப்பில்லை என்று கூறினார்.
மேலும், தென்னிந்திய சென்சார் போர்டு அதிகாரிகள், தங்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பதாகவும், லஞ்சம் வாங்குவதில்லை எனவும் குறிப்பிட்ட விஷால், வட இந்திய சென்சார் போர்டு அதிகாரிகள் அதற்கு நேர்மாறாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“