ஊட்டி அருகே மசினக்குடி கிராம பொதுமக்கள் 1000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டு மரம் நடும் விழாவுக்கு நடிகர் விவேக்கை டுவிட்டரில் தொடர்பு கொண்டு அழைத்ததும் உடனே ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட இயற்கை சார்ந்த விஷயங்களில் விவேக்கின் ஈடுபாட்டை டுவிட்டரில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் தான் நடிக்கும் படங்களில் நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் மூட நம்பிக்கை ஒழிப்பையும் வலியுறுத்துவார். அதனால், அவரை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அடுத்து நடிகர் விவேக்கை பலரும் சின்னக் கலைவாணர் என்று பாராட்டுகிறார்கள்.
நடிகர் விவேக் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, இளைஞர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகளிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். தன்னை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் ஃபாலோவராக கூறிக்கொள்ளும் விவேக்கின் சினிமாவுக்கு வெளியே அவருடைய பொதுநலச் செயல்பாடுகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வணக்கம் @Actor_Vivek ஐயா????
ஊட்டி அருகே மசினகுடி கிராமம் உள்ளது. ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 1000 மர கன்றுகள் நட முடிவு செய்த்துள்ளனர்
இவ்விழாவில் நீங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்க வேண்டும் என ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்
அழைக்கவும்
9597114046 நன்றி????
— RamKumarr (@ramk8060) March 10, 2020
இந்த நிலையில், ஊட்டி அருகே மசினக்குடி கிராமப் பொதுமக்கள் 1000 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டு அதனை விழாவாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த மரம் நடுவிழாவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற செயல்பாடுகளில் அதிக ஈடுபாடுடைய நடிகர் விவேக் வந்து தொடங்கிவைத்தால் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவலாகும் என்று கருதியுள்ளனர். அவரை எப்படி தொடர்பு கொள்வது என்று யோசித்த மரம் நடும் விழாவை நடத்தும் குழுவில் உள்ள ராம்குமார் என்ற டுவிட்டர் பயனர், டுவிட்டரில் நடிகர் விவேக்கை குறிப்பிட்டு, “வணக்கம் விவேக் ஐயா, ஊட்டி அருகே மசினகுடி கிராமம் உள்ளது. ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 1000 மர கன்றுகள் நட முடிவு செய்த்துள்ளனர்.
இவ்விழாவில் நீங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்க வேண்டும் என ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று தனது செல்போன் எண் தெரிவித்திருந்தார்.
இதனைப் பார்த்த நடிகர் விவேக் உடனடியாக நிச்சயம் வருகிறேன். விரைவில் அழைக்கிறேன் என்று பதில் டுவிட் செய்துள்ளார்.
இதனால், மரம் நடுவிழாவுக்கு டுவிட்டரில் விடுத்த அழைப்பை விவேக் உடனடியாக ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளதால் மசினக்குடி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து மசினக்குடியில் மரம் நடுவிழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தினேஷை தொடர்பு கொண்டு பேசினோம். தினேஷ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துக் கூறுகையில், “பொதுவாக மசினக்குடியில் கிராம பொதுமக்கள் கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவோம். அந்த வகையில், மரம் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்தோம். இது போன்ற விஷயங்களுக்கு நடிகர் விவேக் அதிக முக்கியத்துவம் தருவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் வந்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தால் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பரலாக சென்றடையும். அதனால், டுவிட்டரில் அவருடன் தொடர்புகொண்டோம். அவர் நிச்சயம் வருகிறேன். விரைவில் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இப்போது விவேக் சார் என்றைக்கு வருவதற்கு தேதி தருகிறாரோ அப்போது இந்த மரம் நடும் விழா நிகழ்ச்சியை நடத்த தயாராக உள்ளோம். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.