தனது நகைச்சுவையால் கோடிக் கணக்கான ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக் தனது மரணத்தின் மூலம் இன்று அனைவரையும் ஆழந்த துயரத்தில் கண்ணீர் சிந்த வைத்து சென்றுள்ளார்.
தமிழ் சினிமா உலகம் பல நகைச்சுவை நடிகர்களைக் கண்டுள்ளது. அதில் பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான நகைச்சுவை பாணி இருந்தது. அந்த வகையில் நடிகர் விவேக் தனக்கென்று ஒரு தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் விவேக் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்துகொண்டிருந்த நிலையில், 1987ம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி சினிமாவில் தனது பயணத்தை உறுதியாகத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, நடிகர் விவேக் 3 தசாப்தங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தை தொடர்ந்து வந்தார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தனது நகைச்சுவை மூலம் திரைப்படங்களில் மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் சமூக சீர்த்திருத்தங்களை வலியுறுத்தியும் நடித்தார். அவருடைய தொடர்ச்சியாக நடிகர் விவேக், தனது நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்த கருத்துகளைக் கூறி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திகக்வும் வைத்தார். சினிமாவில் நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்களையும் அசட்டுத் தனங்களையும் வெறும் கோமாளித் தனங்களையும் காட்டி வந்தவர்கள் மத்தியில் சாதி பாகுபாடு, லஞ்சம், ஊழல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிரிக்க வைத்தார்.
கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய நீதிமன்ற காட்சியை தனது நகைச்சுவை மூலம் சமூக விழிப்புணர்வு கருத்துகளுடன் வேறு வடிவில் அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்தார். வாஸ்து சாஸ்திரம் என்று ஏமாற்றுபவர்களும் போலி சாமியார்களும் எப்படி உருவாகிறார்கள் என்று சாடியிருப்பார். மூட நம்பிகை, தீண்டாமை, சமூக பிற்போக்குத் தனங்களை தனது நகைச்சுவை சாட்டையால் விளாசினார். நடிகர் விவேக்கின் சமூக சீர்த்திருத்த விழிப்புணர்வு நகைச்சுவை பாணி என்பது திராவிட இயக்க கருத்துகளின் தொடர்ச்சியாக இருந்தது. அதனால்தான், கலைஞர் கருணாநிதி நடிகர் விவேக்கை சின்ன கலைவாணர் என்று அழைத்து மகிழ்ந்தார்.
சமூக சீர்திருத்தக் கருத்துகள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்துகளைக் கூறும் நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் நகைச்சுவையை வெளிப்படுத்தாமல் வெறுமனே கருத்துகளாக உறைந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். ஆனால், நடிகர் விவேக் சமூக விழிப்புணர்வு கூறும் தனது நகைச்சுவை காட்சிகளில் அப்படி ஒரு விபத்து நேராமல் நகைச்சுவையை வெளிப்படுத்தும்விதமாக மிகவும் கவனமாகவும் இயல்பான நகைச்சுவையுடனும் நடித்தார். நடிகர் விவேக்கின் அறிவுப்பூர்வமான நகைச்சுவை காட்சிகளைக் கண்டு எல்லா தரப்பு மக்களும் சிரித்து மகிழ்ந்தனர்.
அவருடைய அற்புதமான நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக பாளையத்து அம்மன், சாமி, ரன், படிக்காதவன் என பல படங்களை உதாரணமாகக் கூறலாம். பெரும்பாலும், சினிமாவில் சமூக விழிப்புணர்வு கருத்துகளைக் கூறும் படங்களில் நடிப்பவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை. ஆனால், நடிகர் விவேக் சினிமாவில் கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் நிஜவாழ்க்கையிலும் சமூக விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்புபவராகவும் சமூக சேவை செய்பவராகவும் இருந்தார். அதனால்தான், நடிகர் விவேக்கின் நகைச்சுவைக்கு நாட்டின் முதல் குடிமகன் முதல் கடை கோடியில் இருக்கும் சாமானியன் வரை ரசிகர்களாக இருந்தனர்.
சினிமாவில் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை பேசும் நகைச்சுவை நடிகர் விவேக்கின் சினிமா பயணத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனான தொடர்புக்குப் பிறகு பெரும் மாற்றம் ஏற்பட்டது. அப்துல் கலாம் மீது பெரிய மரியாதை கொண்டிருந்தார் நடிகர் விவேக். அப்துல் கலாம் இளைஞர்களை ஊக்குவித்தது போல, நடிகர் விவேக்கும் இளைஞர்களை ஊக்குவித்தார். அப்துல் கலாம் மரம் நடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என விவேக்கிடம் கூறியதை அடுத்து அவர் மாநிலத்தில் பல இடங்களில் மரங்களை நட்டுள்ளார்.
மரம் நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் உண்மையாக ஈடுபடும் இளைஞர்களை நடிகர் விவேக் ஊக்கப்படுத்தினார். இதனால், நடிகர் விவேக்குக்கு சினிமாவைத் தாண்டி வெளியேயும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். மரம் நடும் பணியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் உண்மையாக ஈடுபடும் இளைஞர்கள் எங்கே அழைத்தாலும் அங்கே சென்று அவர்களை ஊக்கப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து உற்சாகப்படுத்தினார்.
சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும், அனைவரும் சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பக ஹெல்மெட் அணிய வேண்டும் என்படை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடிகர் விவேக்கின் பங்களிப்பு மறக்க முடியாதது. அரசாங்க முன்னெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடிகர் விவேக்கை பயன்படுத்திக்கொண்டது.
சினிமாவில் எல்லாமே ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால், விவேக் சினிமா துறையில் இருந்தாலும் ஆதாயம் கருதாமல் மக்களுக்காக செலவிட்டார். சினிமாவில் தனது நகைச்சுவை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் விவேக் நிஜ வாழ்க்கையிலும் தனது சமூக அக்கறை மிகுந்த செயல்பாட்டின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். நடிகர் விவேக் மாரடைப்பால் இறப்பதற்கு முன்புகூட கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனைவரும் செல்லுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அவரே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார். திரையிலும் நிஜவாழ்க்கையிலும் சொல்லிலும் செயலிலும் ஒன்றாக இருந்த நடிகர் விவேக்கின் மறைவால் தமிழ் சினிமா துறையினர் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர். திரையில் காமெடியானாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஹீரோவாக இருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் விட்டுச் சென்றுள்ள இடம் யாராலும் நிரப்ப முடியாத ஒரு இடம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.