இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சிம்புதேவன் ‘போட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘போட்’ திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷனுக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
போட் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு நடிகர் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்தார். இதனால், படக்குழுவினர், ஊடகத்தின் காத்திருந்தனர். குற்றாலத்தில் இருந்து 10 மணி நேரம் பயணம் செய்து வந்திருப்பதாகவும் தாமதத்துக்கு மன்னிப்பும் கோரினார்.
பேசிவிட்டு அவர் மேடையை விட்டு இறங்கியபோது, ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, நடிகர் யோகி பாபு மைக்கை ஆஃப் செய்துவிட்டு, வெளியே வா பேசுகிறேன் என்று கூறினார்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இரண்டாம் நகைச்சுவை நடிகராக, பிறகு முதல்நிலை, முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். பின்னர், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள் இவர் இல்லாமல் இல்லை என்ற நிலைக்கு சென்றார். அவர்தான் நடிகர் யோகி பாபு.
தமிழ் சினிமா உலகில் பிஸியாக இருக்கும் நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் அருகே நடந்து வருகிறது. தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளாவுக்கு சொந்தமான கும்பாவுருட்டி அருவி மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, 96 திரைப்பட புகழ் கவுரி கிஷன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள ‛போட்’ படத்தின் புரொமோஷனுக்காக செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த சந்திப்பில், நடிகை கவுரி கிஷன், இயக்குநர் சிம்புதேவன், நடிகர் எம்.எஸ். பாஸ்கர், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், நடிகர் யோகி பாபு நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு மிகவும் தாமதமாக வந்தார். மேடை ஏறிய யோகி பாபுவிடம் தாமதமாக வந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நடிகர் யோகி பாபு, “நேற்று முன்தினம் குற்றாலத்தில் சூட்டிங் இருந்தது. 10 மணி நேரம் காரில் பயணம் செய்து தான் புரொமோஷனில் பங்கேற்றேன். எல்லா கம்பெனியும் எல்லா நேரமும் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டார்கள். எனது சூழ்நிலை அப்படி மாட்டிக் கொண்டேன். அந்த ஹீரோவுக்கு வேற இன்னும் 2, 3 நாளில் கல்யாணம் ஆகப்போகிறது. இதனால், முடித்து கொடுத்துவிட்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டனர். யாரும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப கடின உழைப்புடன் உருவான படம் இது. இந்த படத்தை நீங்கள்தான் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி. தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள். ரொம்ப ஸாரிங்க” என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.
அப்போது ஒரு செய்தியாளர் “நீங்கள் 6 மணி என்று சொன்னீர்கள். ஆனால், 3 மணிநேரம் தாமதமாக 9 மணிக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு வேலை இருப்பது போல் எங்களுக்கும் வேலை இருக்காதா?” என்று கேட்டார்.
இதற்கு யோகி பாபு பதிலளிக்கையில், “எனக்கு நேரம் எதுவும் சொல்லவில்லை. அதே நேரத்தில், என்னுடைய சூழ்நிலையை நான் கூறிவிட்டேன். அதற்கு நீங்கள் வாருங்கள்.. பார்த்து கொள்ளலாம் என கூறினார்கள். எல்லா சிக்னலுக்கும் சென்று நான் கேட்க முடியாது இல்லையா?. நான் காரில் தானே வருகிறேன். நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. கொஞ்சம் நிதானமாக கேளுங்கள். உங்களின் கோபம் புரிகிறது. அதற்கு தான் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டேனே” என்று தன்மையாகக் கூறினார்.
இதையடுத்து, நடிகர் யோகி பாபு நன்றி கூறி தனது பேச்சை முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கினார்.
அப்போது ஒரு செய்தியாளர், “நீங்கள் நடிகர் சங்கத் தலைவராகப் போவதாக ஒரு தகவல் இருக்கிறது'” என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டதும் சிரித்த யோகி பாபு, அந்த செய்தியாளர் இருக்கும் இடத்தைப் பார்த்து சொடக்குப்போட்டு, “மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா.. நான் பேசுறேன்” என்று நகைச்சுவையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.