கேரள மாநிலம் வயநாட்டில், ஜூலை 30 அதிகாலை மிகப்பெரிய அளவில் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி 280க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பலரும் வயநாட்டுக்கு நிதி உதவி அளித்துவருகின்றனர்.
சூர்யா-ஜோதிகா, கார்த்தி நிதியுதவி
நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிலையில் திரைப்பட நடிகர்கள் சூர்யா- ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் வழங்கியுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், “தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பதே எங்கள் கவனம். ராணுவ வீரர்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு விட்டதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கான இயந்திரங்களை கீழே இறக்குவது கடினமாக இருந்தது” என்றார்.
ராகுல் காந்தி விசிட்
மழைக்கு நடுவே சம்பவ இடத்திற்கு இன்று வந்த ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மேப்பாடியில் உள்ள சமூக நல மையத்திற்கு புறப்பட்டனர். அங்கிருந்து இருவரும் டாக்டர் மூப்பனின் மருத்துவக் கல்லூரி மற்றும் மேப்பாடியில் உள்ள இரண்டு நிவாரண முகாம்களுக்கு செல்கின்றனர்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் வயநாட்டில் உள்ள சூரல்மாலாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை வியாழக்கிழமை மதியம் பார்வையிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“