சட்டமன்றத் தேர்தலில், “நான் கண்டிப்பாக விஜய்க்குதான் ஓட்டு போடுவேன்” என்றும் அவருக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து ஆதரவு கொடுப்பதற்கு நேரம் இருக்காது, வாய்பில்லை” என்றும் நடிகை ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு த.வெ.க செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், நடிகர் விஜய் கோட் படத்துக்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பாப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் அழகு சாதனப் பொருட்கள் கடையைத் திறந்து வைத்த பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, வருகிற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக விஜய் சாருக்குதான் ஓட்டுப் போடுவேன் என்றும் ஆனால் தேர்தலில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய நேரம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, ராஜா ராணி சீசன் 2 சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இதையடுத்து, சன் டிவியில் இனியா சீரியலில் நடித்தார்.
மதுரை ஐயர் பங்களா பகுதியில் பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தனியார் பெண்கள் அழகு சாதன கடையினை திறந்து வைத்தார். மதுரையில் ஏராளமானோர் திரண்டு ஆல்யா மானசாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆல்யா மானசா, “மதுரைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரை மக்களின் அன்பையும் மதுரை உணவின் சுவையையும் யாரும் மிஞ்ச முடியாது. உரிமையாக பாசம் வைத்து பழகுவது மதுரையில்தான். மற்ற ஊர்களுக்கு செல்வதை விட மதுரைக்கு வருவது எப்போதுமே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். மதுரை ஜிகர்தண்டா மிகவும் பிடிக்கும்.” என்று மதுரையையும் மதுரை மக்களையும் பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகை ஆல்யா மானசா, “சீரியலில் தினமும் உங்கள் அனைவரின் வீட்டிற்கு ஒன்பது மணிக்கு நான் வந்து விடுவேன். ஆனால், திரைப்படங்களில் நடித்தால் நீங்கள் தான் என்னை வந்து பார்க்க வேண்டும். எந்த சிரமமும் இல்லாமல் நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவதால் எனக்கு சீரியலில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும்.” என்று கூறினார்.
செய்தியாளர்கள் அரசியல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா, “விஜய் சாருக்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன். அவருக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து ஆதரவு கொடுப்பதற்கு நேரம் இருக்காது. பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை. குடும்பம், படப்பிடிப்பு என அதிலே நேரம் ஆகிவிடுகிறது. ஆனால், விஜய் சாருக்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன். நிச்சயமாக ஐ வோட் ஃபார் ஹிம். மதுரை கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களில் நடிக்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஆல்யா மானசா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.