சர்ச்சைகளுடன் சகஜமாக வலம் வரும் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை கவிதை வரிகளுடன் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் என்று பலருடன் நடித்துவிட்டார். அதே நேரத்தில், ஹிரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அமலா பால் நடித்து வெளியான ஆடை படம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமலா பால் ஆடை இல்லாமல் நடித்த ஆடை படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் தமிழ் சினிமா உலகை கொஞ்சம் அசைத்து பார்த்தது என்றே சொல்லலாம்.
ஆடை படத்தை தொடர்ந்து, அமலா பால் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார். அதோ அந்த பறவை போல, காடவர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
அமலா பால், சினிமாவில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெறுவார்.
அந்த வகையில், அமலா பால், இன்ஸ்டாகிராமில் புகைபிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு சில கவிதை வரிகளையும் எழுதியுள்ளார். “எல்லா நற்பண்புகளும் முழுவதுமாக சலவை செய்யப்பட்ட லினென் துணி போல இல்லை,
எல்லா தீமைகளும் ஒரு ஹேங்ஓவரை மறுபரிசீலனை செய்யாது,
எல்லா புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது,
எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை,
அனைத்து பாவிகளின் கைகளிலும் ரத்தம் இருப்பதில்லை,
அதிர்வுகளைக் கேளுங்கள், விந்தைகளைப் பார்க்க வேண்டாம்.” என்று அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.
அமலா பால் புகைப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், இது ஏதாவது படத்துக்கான போஸ்டரா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். சில நெட்டிசன்கள் அமலா பால் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"