கதாநாயகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு என தனி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருக்கின்றது. நாயகர்கள் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டார்களோ அதே அளவிற்கு கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டனர்.
அந்த வகையில் 80களில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர்தான் நடிகை அம்பிகா. இவருடைய தங்கையும் மிகப்பெரிய நடிகையாக அந்த காலகட்டத்திலேயே வலம் வந்தவர் அவர்தான் நடிகை ராதா. நடிகை அம்பிகா நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.
80களில் கொடி கட்டி பறந்து ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவருடன் பல திரைப்படங்களில் நடிகை அம்பிகா நடித்துள்ளார். சமகாலத்தில் அவருடைய தங்கை ராதாவும் இவருக்கு போட்டியாக நடித்து வந்தார்.
1979 ஆம் ஆண்டு வெளியான மாமாங்கம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அம்பிகா அறிமுகமானார். 1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அம்பிகா வைத்திருந்தார். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை முழுமை அடைய செய்வது தான் இவருடைய வெற்றிக்கு காரணமாகும்.
பலர் ஏற்று நடிக்க தயங்கக்கூடிய பல்வேறு கதாபாத்திரங்களில் தயங்காமல் அம்பிகா நடித்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் படிக்காதவன் இந்த திரைப்படத்தில் சாராயம் காய்ச்சி விற்கக் கூடிய ஒரு இளம் பெண்ணாக இவர் நடித்திருப்பார்.
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பலரும் அச்சப்படுவார்கள். அந்த கதாபாத்திரத்தை சரியான முறையில் தைரியமாக ஏற்று நடித்து மற்ற நடிகைகளுக்கு ஒரு உதாரணமாக அம்பிகா மாறினார். பாக்யராஜ் இயக்கத்தில் உருவான அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவையான நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இப்போது சமீபத்தில் நடந்த சுயசக்தி விருது வழங்கும் விழாவில் நடிகை சுஹாசினி அம்பிகாவுக்கு விருது வழங்கினார். அப்போது சகலகலா வல்லவன் படத்தில் கமலின் நடிப்பை விட அம்பிகாவின் நடிப்பை ரசித்ததாகவும், அவர் மிகவும் அருமையான நடிகை என்றும், நடிப்பதற்காகவே பிறந்தவர் என்று சுஹாசினி மேடையில் புகழ்ந்துள்ளார்.
" கமலை விட அம்பிகா வெளிப்படுத்தும் முக பாவனைகளை நான் மிகவும் ரசித்தேன்." என்று அவரை பாராட்டி சுஹாசினி பேசியுள்ளார். ஆனால் அதற்க்கு அம்பிகா, "அவர் என்னை நிஜமாகவே கேட்ட வார்த்தையில் திட்டினார், அதனால் தான் அப்படி நடித்தேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
அவன் இவன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு தாயாக இவர் நடித்த கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவர் தொடங்கிய காலத்திற்கும் தற்போது இருக்கும் தமிழ் சினிமாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
அதற்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டு நடிப்பதில் இவர் வல்லவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இன்று வரை பெரிய திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.