எலிபன்ட் விஸ்பர்ர்ஸ் ஆவணப்படம் கடினமான உழைப்பால் ஆஸ்கர் அளவிற்கு சென்று வெற்றி பெற்றிருப்பது இந்தியாவிற்கு இந்திய சினிமாவிற்கும் பெருமை சேர்த்து இருப்பதாக திரைப்பட நடிகை அமிர்தா ஐயர் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் ரத்தினம் கல்லூரியின் சார்பில் எப் சீரிஸ் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. குறும்படங்கள் திரையிடல், பேஷன் ஷோ மற்றும் உணவுத் திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை அமிர்தா கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: மேடையில் காடுவெட்டி குரு, வீரப்பன் படம்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ரியாக்ஷன்
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமிர்தா கூறியதாவது, சினிமாவில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. நான் எனது இலக்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது தான் முதல்படி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் நிறைய படிகள் இருக்கிறது.

தற்போது ஹனுமான் என்ற பான் – இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் வரும் மே மாதம் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது அனைத்து மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன். எல்லா மொழிகளும் சினிமா ஏற்றம் கண்டு வருகிறது. நல்ல கதை, நல்ல காதாப்பாத்திரம் கிடைத்தால் எந்த மொழியிலும் நடிக்கலாம், என்று அம்ரிதா கூறினார்.
முன்னணி நடிகைகளுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தன்னைபோன்றே புதிதாக வரக்கூடிய நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்பு கிடைக்கிறது. முன்பு இருந்ததை போல யாருக்கும் பெரிய கதாப்பாத்திரங்கள் மட்டும் தான் வராது ஆனால் திறமையாக உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது என்று பதிலளித்தார்.
மேலும் எலிபன்ட் விஸ்பர்ர்ஸ் குறும்படத்தின் இயக்குநர் காட்சி தொடர்பியல் படித்தவர் என்பது தொடர்பான கேள்விக்கு, திறமையானவர்களாக இருக்கிறார்கள், சினிமாவை மதிப்பவர்களாக சினிமா அறிவை தெரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடினமான உழைப்பால் ஆஸ்கர் அளவிற்கு சென்றிருக்கிறார்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமிர்தா கதை நன்றாக இருந்தால் சிறு பட்ஜெட் அல்லது பெரிய பட்ஜெட் என்றில்லாமல் எல்லா படமும் நன்றாக போகும். கதையின் கரு நன்றாக இருந்து எல்லாருக்கும் பிடித்த மாதிரி படம் இருந்தால் படம் வெற்றி பெறும் என்று கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil