கொரோனா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். அஞ்சலி தான் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளைத் தவிர சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. 5-ம் கட்ட பொது முடக்க அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகள் கட்டுப்பாடுகளுடன் டிவி சீரியல் படப்பிடிப்புகள், சினிமா போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி, அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஞ்சலி, தனக்கு ஒரு பெரிய பிரேக்கை தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தற்போது, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை அஞ்சலி, இயகுனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்.
அஞ்சலி வீடியோ காலில் தான் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து அஞ்சலி குறிப்பிடுகையில், “டப்பிங் பேசிய தருணம். வீடியோ காலில் குவாரண்டைன் டப்பிங்” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஞ்சலி டப்பிங் பேசிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் என்ன படம் என்று கேட்டு வருகின்றனர். சிலர், நயன்தாரா எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.