தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை அனுஜா ரெட்டி, சினிமா தன்னுடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து தனது அன்பவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் கவுண்டமணிக்கு கொஞ்சம் ஆட்டிட்யூட் ஜாஸ்தி என்றும் நடிகர்களை மட்டமாகப் பேசுவார் என்றும் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக்கொண்ட தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் பதிந்திருப்பார்கள். அதற்காக, அவர்கள் பெரிய ஹீரோவாகவோ, பெரிய ஹீரோயினாகவோ நடித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள், சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மனதில் பச்சைக்குத்தியதைப் போல பதிந்து விடுவார்கள். அந்த வரிசையில், நடிகை அனுஜா ரெட்டியும் ஒருவர். நடிகை அனுஜா ரெட்டி ஆரம்பத்தில், சினிமாவில் குத்து பாடல்களுக்கு நடனம் ஆடி வந்தார். பிறகு நடிகர் செந்தில் கவுண்டமணி போன்ற நடிகர்களோடு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில், நடிகை அனுஜா ரெட்டி கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் கவுண்டமணி மற்றும் செந்தில் குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தனது கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார். அதில், கவுண்டமணிக்கு கொஞ்சம் ஆட்டிட்யூட் ஜாஸ்தி என்றும் நடிகர்களை மட்டமாகப் பேசுவார் என்றும் பரபரப்பு பேட்டி அளித்திருப்பது, இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், நடிகை அனுஜா ரெட்டி பேசியிருப்பதாவது: “சினிமாவில் நான் அறிமுகமான புதிதில் முதலில் கவர்ச்சியான பாடல்களுக்கு தான் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் கவர்ச்சியான பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது குறித்து எங்கள் வீட்டில் எதுவுமே கூறவில்லை. காரணம், அவர்களுக்கு சினிமா பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியாது. அதனால், அவர்கள் என்னுடைய நடிப்பை கண்டுக்கொள்ளவில்லை. அதுபோல, நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய சூட்டிங் ஸ்பாட்டிற்கு என்னுடைய அப்பா, அம்மா வந்ததே கிடையாது. எப்போதும், என்னுடைய அக்கா தான் வருவாங்க. நான் கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அதில் கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் கிண்டல் செய்வதுபோல என்னையும் ஆரம்பத்தில் அதிகமாக கிண்டல் செய்வாரு. அவரு பொதுவாக எந்த நபர் பக்கத்தில் இல்லையோ அவரைப்பற்றி தான் அதிகமாக இன்னொருவரிடம் பேசுவார். ஆனால், செந்தில் அப்படி கிடையாது. செந்தில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் இருக்கிறவர்களை பற்றி மட்டும் பேசுவார். அவர்களிடம் பாசமாக பேசுவார் அவ்வளவுதான். ஆனால், கவுண்டமணிக்கு கொஞ்சம் ஆட்டிட்யூட் ஜாஸ்தி. ஒரு மாதிரியாக நடிகர்களை மட்டமாகப் பேசுவார். அவர் அப்படி ஏதாவது பேசினால், மற்றவர்களைப் பற்றி பேசுகிறீர்களே, நீங்கள் மட்டும் என்ன என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன். அது ஒரு மாதிரியாகிவிட்டது. அவர் நடிகர்களை மட்டமாகப் பேசுவார். அதற்கு பிறகு, அவருடன் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன்” என்று நடிகை அனுஜா ரெட்டி கூறியுள்ளார்.
மேலும், அந்த பேட்டியில் நடிகை அனுஜா ரெட்டி கூறியிருப்பதாவது: “இருந்தாலும், அவர் நடிக்கும் படங்களில் நான் டான்ஸ் ஆடி இருக்கிறேன். அப்போ கூட அவரிடம் நான் பேசவே இல்ல. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து தான் வாசு இயக்கிய உடன்பிறப்பே படத்தில் அவரோடு நான் நடித்தேன். வாசு சார் படம் என்பதால் அவரால் என்னை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்று நினைக்கிறேன்” என்று அனுஜா ரெட்டி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“