/indian-express-tamil/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-182442-2025-08-26-18-24-58.jpg)
சில்க் ஸ்மிதா என்று அனைவராலும் அறியப்படும் கவர்ச்சி நடிகை ஆந்திர மாநிலம் ஏலூருவில் 1960ம் ஆண்டு பிறந்தவர். சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவருடைய குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால் தன்னுடைய பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார்.
இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால் பெற்றோர் அவருக்கு சிறு வயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.
ஒப்பனைக் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கிய விஜயலட்சுமியை நடிகர் வினுசக்ரவர்த்தி திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார். 'வண்டிச்சக்கரம்' படத்தில் சாராயக் கடை வேலைக்காரியாக நடித்த முதல் படத்திலேயே கவனம் பெற்ற அவர், பின்னர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார்.
இதனால் அன்று வரை விஜயலட்சுமி என்று அறியப்பட்டவர் சில்க் ஸ்மிதா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து 80களில் தென்னிந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னியாக வலம்வந்தார்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என்றும், மேலும் பல சூழ்நிலைகளும் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
இவருடைய மறைவிற்குப் பிறகு "தி டர்டி பிக்சர்" என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
சமீபத்தில் நடிகை அனுராதா சில்க் ஸ்மிதாவின் இறப்பிற்கு பிறகு அவரது உடலுக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என்பதை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
"அவங்க வீட்டிற்கு நான் பொய் பார்த்த போது விஜய மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார்கள். பிறகு உடனே அங்கு சென்றேன். நானும் ஸ்ரீவித்யா அம்மாவும் தான் ஒன்றாக சென்றோம். அங்கு சென்று பார்த்த போது அவர்கள் உடல் பக்கத்தில் யாருமே இல்லை. ஈ எல்லாம் மொய்த்து கொண்டிருந்தது.
அப்போது எங்களிடம் ஒரு பத்திரிக்கையாளர் வந்து கொஞ்சம் கூடவே இருங்க இல்லையென்றால் இந்த பல விதமாக யோசிக்கும் பல பேர் இருக்கிறார்கள் என்று கூறினார்." என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.