அசல் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும் நடிகர் அஜித் இன்னும் என்னை மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளார் என்று அந்த படத்தில் நடித்த நடிகை பாவனா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா, தொடர்ந்து வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம்கொண்டான், ஆர்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு தமிழில் நடிக்காமல், கன்னடா மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ள பாவனா தற்போது தனது சகோதரர் இயக்கத்தில் தி டோர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பிரீமியர் செய்யப்பட்டது. ஹாரார் த்ரில்லர் பாணியில் தயாராகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் கணேஷ் வெங்கட் ராம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாவனா, கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்து விலகி இருப்பது போல் உணரவில்லை. "இவ்வளவு காலம் திரையுலகின் ஒரு பகுதியாக இருந்ததைப் போல் உணர்கிறேன். தமிழில் நான் கடைசியாக நடித்த படம் அஜித் சாருடன் அசல். 2010ல் இந்த படம் வெளிவந்தது.அதன்பிறகு பல மலையாள, கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தேன், தமிழில் நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். தமிழில் இருந்து விலகியது திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல.
இப்போது அண்ணன் படத்தின் மூலம் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு மீண்டும் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறிய பாவனாவிடம், அஜீத்குமாருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு “அசல் படப்பிடிப்பின் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் மலேசியா படப்பிடிப்பில் மட்டுமே பங்கேற்றேன். அஜித் அன்பான மனிதர். அவர் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் கவனித்து வந்தார்.
சமீபத்தில், துனிவு படப்பிடிப்பின் போது, அவர் மஞ்சு வாரியரிடம் என்னை பற்றி விசாரித்து என்னுடன் பேச விரும்புவதாக கூறினார். அப்போது மஞ்சு வாரியார் என்னை அழைக்க முயன்றபோது அவரால் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர், ஒருநாள் மீண்டும் என்னை தொடர்புகொண்டபோது நான் சென்னையில் இருந்தேன். அப்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருந்ததால், அஜித் சாரை நேரில் சந்திக்கச் சென்றேன்.
அப்போது நிறைய விஷயங்களைப் பேசினோம். அஜீத் சார், மஞ்சு அக்கா, நானும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம். அவரது பிறந்தநாளில் சந்திப்பின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளேன். அசல் படம் வெளியாகி ரொம்ப நாளாச்சு, இன்னும் என்னை நினைச்சு நல்லா இருக்கணும்னு வாழ்த்தியது மனதை நெகிழ வைக்கிறது. இதையெல்லாம் அவர் செய்ய வேண்டியதில்லை. அதனால்தான் அவர் அனைவராலும் கொண்டாடப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“