/indian-express-tamil/media/media_files/2025/07/20/actress-bhuvaneshwari-2025-07-20-18-19-49.jpg)
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்த புவனேஷ்வரி, சமீப காலமாக தீவிர ஆன்மிகவாதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது ஆன்மிக பயணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
அதன்படி, "எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்று நான் நினைப்பேன். குடும்ப சூழல் மற்றும் என் அம்மாவின் வற்புறுத்தல் பேரில் சினிமாவில் நடிக்க வந்தேன். எனினும், இந்த துறைக்கு வந்த பின்னர், எனது பணியை முழு ஈடுபாட்டுடன் செய்தேன். கூட்டுக் குடும்பமாக நாங்கள் வாழ்ந்தோம். எனவே, அனைவரின் வாழ்வாதாரத்திற்காகவும் நான் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
என் வாழ்வில் ஏற்பட்ட பல சோகங்கள், என்னுடைய இயல்பான குணத்தை மாற்றி இறுக்கமான ஒரு தோற்றத்தை கொடுத்து விட்டது. சுமார் 15 வயதில் எனது கலைப்பயணத்தை தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் அப்போதைய பெரிய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஆரம்பத்தில் கிளாமர் ரோல்களில் நடிக்க தயக்கம் இருந்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு அது தேவை என்று பின்னர் உணர்ந்தேன்.
எனது சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்தது. குழந்தை பருவம் முதலே கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவேன். படப்பிடிப்புகள் முடிந்த பின்னரும், நேராக கோயிலுக்கு செல்லும் வழக்கத்தை கடைபிடித்தேன். சமீப நாட்களில் இந்த பக்தி அதிகரிக்க தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, சுமார் மூன்று ஆண்டுகளாக அன்னதானம் செய்து வருகிறேன்.
ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரித்ததால், சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால், இப்போதும் சினிமாவில் இருந்து வாய்ப்பு வருகிறது. எனினும், விருப்பம் இல்லாத காரணத்தினால் நடிக்காமல் இருக்கிறேன். சினிமாவில் நடித்த போதும் சரி, ஆன்மிகத்தில் இருக்கும் போதும் சரி, இரண்டு வாழ்க்கையிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
ஏனெனில், சினிமாவில் நடித்த போது என்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன். இப்போது மக்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் வாழ்வில் பல தவறான முடிவுகளை நான் எடுத்திருக்கிறேன். அதற்கான பலன்களையும் நான் அனுபவித்திருக்கிறேன்" என்று நடிகை புவனேஷ்வரி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us