சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டு தளங்களிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை தீபா அக்கா. சமீபத்தில், ஜெ.எஃப்.டபிள்யூ பின்ஜி யூடியூப் சேனலில் வெளியான ஹோம் டூர் வீடியோவில் தனது வீடு மற்றும் தனது வாழ்க்கை, சினிமா பயணம் மற்றும் தனது குடும்பம் குறித்து மனம் திறந்து பேசினார்.
தீபா அக்கா தனது நடிப்பு வாழ்க்கையை 2002-2003 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரின் மூலம் தொடங்கினார். அதன்பின், சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல வெற்றித் தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
Advertisment
திரைப்படங்களில் அவர் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும், அவை அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரவில்லை. நடிகர் கார்த்தி நடித்த "கடைக்குட்டி சிங்கம்" (2018) திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நடிகர் கார்த்தி அவரை முதன்முதலில் "தீபா அக்கா" என்று அழைத்தார். அந்தப் பெயரே அவருக்கு பரவலான அங்கீகாரத்தையும் பிரபலத்தையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' படத்தில் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஒரு தருணம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் தனது தாயாரின் மறைவைப் பற்றி தீபா அக்கா உருக்கமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். தனது அம்மா இறந்த அதே நாளில், ஒரு சீரியலுக்காக டப்பிங் பேசச் சென்றதாக அவர் கூறினார். தனது அம்மா அவரிடம் கற்றுக் கொடுத்த "வாழ்க்கையில் அடுத்த வேலை என்னவோ, அதைப் பார்த்துக்கொண்டு போக வேண்டும்" என்ற பாடமே இத்தகைய இக்கட்டான சூழலையும் எதிர்கொள்ள தனக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார். இது தனது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தருணம் என்றும் அவர் விவரித்தார்.
Advertisment
Advertisements
அவரது வீட்டின் பின்புறத்தில் சுடுகாடு இருப்பதால் பயமாக இருக்குமா என்ற கேள்விக்கு, அது தனக்கு நேர்மறை ஆற்றலைத் தருவதாக அவர் பதிலளித்தார். இந்த வீட்டிற்கு வந்த பிறகு தனது வாழ்க்கையில் வளர்ச்சி அதிகரித்ததாகவும், இது தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதம் என்றும் அவர் நம்புகிறார். மேலும், தனது கணவருடனான அவரது உறவு, புடவைகள் மீதான அவரது ஆர்வம், நடன ஆசிரியர் பணி குறித்தும் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பல ஆண்டுகளாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது கடின உழைப்பால் பல உயரங்களை எட்டிய தீபா அக்கா, தனது பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது தாயார் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்து பேசினார்.