நடிகர் போண்டா மணி, கடந்த ஓராண்டாக சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு திரையுலகினர் பண உதவி செய்து வந்தனர்.
மாதா மாதம் டயாலிசிஸ் செய்து வந்த போண்டா மணி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இந்நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.
அவரின் இறப்புக்கு வந்த நடிகை தேவிஸ்ரீ, “போணடா மணி என் அண்ணன் மாதிரி என அழுதார். அவர் ரொம்ப ஜாலியான மனிதர்.
போண்டா மணி அண்ணன் இறந்துவிட்டார் என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்கிறது. அவர், எங்களுடன் இணைந்து மேலும் பல்வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தோம்” என்றார்.
நடிகை தேவிஸ்ரீ உடன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்பட 3 படங்களில் போண்டா மணி நடித்துள்ளார்.
விஜயகாந்த் இரங்கல்
நடிகர் போண்டாமணியின் மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல் படம்
இலங்கையை பூர்விகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் சுந்தரா டிராவல்ஸ் மாப்பிள்ளை காமெடி பட்டித் தொட்டியெங்கும் ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“