ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கனா சீரியலில் கதாநாயகி பாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷனா அசோகன் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனா சீரியலில் இருந்து தர்ஷனா அசோகன் ஏன் விலகினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘நீதானே என் பொன் வசந்தம்’ சீரியலில் கதாநாயகி ‘அனு’ வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன். இந்த சீரியலுக்குப் பிறகு, மீண்டும் ஜீ தமிழ் டிவியில் ‘கனா’ சீரியலில் கதாநாயகி அன்பரசியாக நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.
‘கனா’ சீரியலில் தர்ஷனா அசோகன் விளையாட்டு வீராங்கணையாகவும் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் நடித்து கலக்கி வந்தார். ‘கனா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி நடை போட்டு வரும் சூழலில்தான், தர்ஷனா அசோகன், இந்த சீரியலில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தர்ஷனா அசோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “ ‘குட்பை’ சொல்வது மிகவும் கடினம்... அன்பரசி கதாபாத்திரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தாள், எப்போதும் இருப்பாள். அன்பரசியாக நான் செலவழித்த நேரத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மேலும், ஒவ்வொரு நாளும் என் மீது இவ்வளவு அன்பைப் பொழிந்ததற்கு நன்றி. இந்தப் பயணத்தின் மூலம் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொண்டேன், தனிப்பட்ட முறையில் நான் வளர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன், அதனால் அனைவருக்கும் நன்றி, நான் அனைவரையும் நேசிகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
‘கனா’ சீரியலில் இருந்து நடிகை தர்ஷனா அசோகன் திடீரென விலகியுள்ளதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தர்ஷனா அசோகன் சீரியலில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“