காதல் மற்றும் திருமணம் என்பது வயதைப் பொறுத்தது அல்ல என்ற கூற்று இந்த நடிகையின் வாழ்க்கையில் மெய்யாக்கியுள்ளது. 51 வயதில் காதல் மலர, சமூகத்தின் ஏளன பேச்சுக்களைத் தாண்டி தைரியமாக இந்த நடிகை தனது இரண்டாவது திருமணத்தைச் செய்துள்ளார்.
வயது என்பது ஒரு எண் மட்டுமே. காதலும் திருமணமும் வயதைக் கருத்தில் கொள்ளும் விஷயங்கள் அல்ல; அவை உணர்வுகளின் அடிப்படையில் அமையும். இந்த தான் உண்மை. பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையான ஜவேரியா அப்பாஸியின் வாழ்க்கையில் சாட்சியமாகியுள்ளது.
தனது 51வது வயதில் காதலை மலர்ந்து, சமூகத்தின் விமர்சனங்களையும் ஏளனங்களையும் துணிச்சலுடன் கடந்து, இரண்டாவது திருமணத்தை செய்துகொண்டுள்ளார். பாகிஸ்தானில் பல தொலைக்காட்சிச் சீரியல்களில் நடித்ததன்மூலம் இவர் பெரிதும் புகழ் பெற்றவர்.
2004-ம் ஆண்டு தொலைக்காட்சி சீரியலில் நடிக்கத் தொடங்கிய ஜவேரியா அப்பாஸி தற்போது வரை பல சீரியல்களில் முன்னணி வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சமீபகாலமாக மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. காரணம், அவரின் திருமணம். நடிக்க வரும்முன்பே ஜவேரியா அப்பாஸி திருமணம் செய்தவர் தான்.
1993-ல் தனது உறவினரான ஷாமூன் அப்பாசி என்பவரை அவர் திருமணம் செய்தார். ஷாமூன் அப்பாசியும் ஒரு நடிகர் தான். மகிழ்ச்சியாகச் சென்ற குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார்.
சுமார் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி 2010-ல் விவாகரத்து செய்தது. விவாகரத்துக்குப் பின் தனது மகளுடன் வசித்துவந்த ஜவேரியா 14 ஆண்டுகள் கழித்து மகளுக்குத் திருமணம் செய்துவைத்தார்.
இதற்கிடையே, நண்பரின் வீட்டு விருந்துக்குச் சென்றபோது தொழிலதிபரான அதீல் ஹைதர் என்பவரைச் சந்திக்க அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகளின் திருமணத்திற்குப் பிறகு தனிமையில் இருந்த ஜவேரியாவுக்கு அதீல் ஹைதர் காட்டிய அன்பு அரவணைப்பாக இருக்க அவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போது ஜவேரியாவுக்கு வயது 51.
அந்த வயதில் தனிமையில் இருந்த அவருக்கு தனக்கென ஒரு குடும்பம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதனை அதீலிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதீலும் ஜவேரியா ஒரு நடிகை என்பதைத் தெரியாமலே காதலித்துள்ளார்.
பின்னர் தான் நடிகை என்பது கூகுள் தேடல் மூலம் தெரியவந்திருக்கிறது. ஜவேரியா காதலை அதீல் ஏற்றுக்கொள்ள இருவரும் திருமணம் செய்யத் தீர்மானிக்கின்றனர்.
முதல் வருடம் தான் 27 வயதான மகளுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார் ஜவேரியா. தற்போது 51 வயதில் தனக்கு இரண்டாவது திருமணம் என்றால் சமூகம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ என்கிற பயம் ஜவேரியாவுக்கும் அதீலுக்கும் இருந்திருக்கிறது.
அந்த எண்ணத்தை உடைக்க ஜவேரியாவின் மகள் உதவியிருக்கிறார். இதனால், 51 வயதில் ஜவேரியா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சுவாரஸ்யம் என்னவென்றால் மகள், மருமகன், மகளின் மாமியார், தனது மாமியார் ஆகியோர் முன்னிலையில் ஜவேரியாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது ஜோடியாக லண்டனில் வசித்துவரும் இருவரும் காதல் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.