/indian-express-tamil/media/media_files/YzUDmVfHJaKBVFIz7ZWg.jpg)
நடிகை ஜோதிகா
நீங்கள் சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள், ஆனால், தேர்தலில் வாக்களிக்கவில்லை என எழும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துப் பேசினார்.
நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தாம்பரத்தில் வெள்ளிகிழமை நடைபெற்றது. அப்போது, “சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள்.. தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அதற்கு நடிகை ஜோதியாக பதிலளித்துப் பேசியதாவது: “நான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பேன். சில நேரங்களில் வேலை காரணமாக வெளியூர்களில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுபோன்ற காரணங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதாக உள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து, அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ஜோதிகா, “என்னிடம் அரசியலுக்கு வாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை. இப்போதைக்கு அந்தத் திட்டமும் இல்லை. எனது 2 குழந்தைகளும் படிக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு வருகிறது. அதையும் வேலையையும் பார்க்க வேண்டியது உள்ளது. அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகை ஜோதிகா, “பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய கூறியுள்ளேன். பெண்கள் சற்று சுயநலமாக இருக்க வேண்டும். உங்களை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு நீங்கள்தான் குடும்பத்திற்கு முதுகெலும்பு. ஆனாலும், உங்களுக்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். 45 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். நான் திருமணத்திற்கு பிறகு ஆரோக்கியமாக இருக்க நிறைய செய்துள்ளேன்.” என்று நடிகை ஜோதிகா பேசினார்.
மேலும், “நான் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த பிறகு நிறைய புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன். புதுமுக இயக்குநர்கள் அருமையாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் புதியதாக சிந்திக்கிறார்கள். சூர்யாவுடன் மீண்டும் நடிப்பதற்கு ஏற்ற கதை இருந்தால் நடிப்பேன். அதுபோன்ற கதைக்காக 10 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று நடிகை ஜோதிகா கூறினார்.
பார்வையற்ற இந்திய தொழிலதிபரும் பொல்லன்ட் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனருமான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைப் பற்றிய வரவிருக்கும் இந்தி மொழி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஸ்ரீகாந்த். துஷார் ஹிராநந்தானி இயக்கத்தில் இந்த படத்தில் ஜோதிகா , அலையா எஃப் மற்றும் ஷரத் கேல்கர் ஆகியோருடன் ராஜ்குமார் ராவ் ஆகியோஒர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை நடைபெற்றது. முதலில் இந்த படம் செப்டம்பர் 2023-ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, இப்போது 10 மே 2024-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.